குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதும் குற்றமே.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு அதிரடி ரத்து!
டில்லி : குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வதும் குற்றமே என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ள சுப்ரீம் கோர்ட், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரும் படி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 28 வயது வயது இளைஞர் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, பார்த்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஜனவரி 11ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் ஆகாது. இது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என தீர்ப்பு வழங்கி இருந்தார். இதற்கு அப்போதே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஒரு நீதிபதியே இப்படி சொல்வது சரியானது கிடையாது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி தயானந்த் மற்றும் நீதிபதி பரித்வாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு செல்லாது. ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு தவறானது.
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் தவறான பொருள் என்பதை இணைத்து போக்சோ சட்டத்தில் பார்லிமென்ட் திருத்தம் கொண்டு வர வேண்டும். நிலுவையில் இருக்கும் திருத்த சட்டங்களை விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். அதோடு குழந்தைகள் ஆபாச படங்கள் (child pornography) என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என அனைத்து கோர்ட்டுகளையும் வலியுறுத்துகிறோம் என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை ஐகோர்ட் நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்