நீட் தேர்வு எழுதிய..1563 மாணவர்களுக்கு.. ஜூன் 23ஆம் தேதி மறுத்தேர்வு.. என் டி ஏ அறிவிப்பு!

Manjula Devi
Jun 13, 2024,06:11 PM IST

டெல்லி:   நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இரண்டு வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.


கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதன் பின்னர்  நீட் தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தனியாக  கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.




இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நீட் தேர்வுகள் தொடர்பான விவகாரத்தில் இரண்டு வாரத்தில் என் டி ஏ பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில், 6 மையங்களில் நீட் தேர்வு எழுதி கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். 1563 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 23ஆம் தேதி மறுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பானையை இன்றே வெளியிட உள்ளதாகவும் தேசிய தேர்வு முகாம் அறிவித்துள்ளது.


மேலும் கருணை மதிப்பெண்களை தவிர்த்து 1563 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் விரும்பினால் மறுதேர்வு நடத்த விண்ணப்பிக்கலாம் எனவும்  தெரிவித்துள்ளது.