செந்தில் பாலாஜி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் சூடான வாதம்.. அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
Jul 21, 2023,01:32 PM IST
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபலும், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் அனல் பறக்க வாதிட்டனர். இறுதியில் ஜூலை 26ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், இந்த வழக்கில் ஏகப்பட்ட சட்டப் பிரச்சினைகள் உள்ளன. இதை நீதிபதிகள் கருத்தில்கொள்ள வேண்டும். முதலில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இரு வேறு தீர்ப்பை அளித்தது. பின்னர் 3வது நீதிபதி ஒரு கருத்தைச் சொன்னார். இப்படித்தான் இந்த வழக்கு இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் அல்ல. அப்படி இருக்கும்போது அவர்கள் சிஆர்பிஎஸ்சி எஸ் 167 சட்டப் பிரிவின் கீழ் ஒருவரை கைது செய்ய முடியாது. எனவே அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுக்கவும் முடியாது. அவர் சிறைக்குத்தான் அனுப்பப்பட வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை விசாரணை செய்ய கோர்ட் அனுமதி கொடுத்தது. ஆனால் 15 நாட்கள் அவர் மருத்துவமனையில்தான் இருந்துள்ளார். எனவே இந்த அனுமதிக் காலத்தை விசாரணைக் காலமாக கருதி கழித்து விட வேண்டும் என்று வாதிட்டார்.