ராகுல் காந்தி தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த நீதிபதி இடமாற்றம்.. கொலீஜியம் பரிந்துரை
Aug 11, 2023,09:49 AM IST
டெல்லி: 23 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலீஜயம் பரிந்துரைத்துள்ளது. இதில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த நீதிபதியும் அடங்குவார்.
சுப்ரீம் கோர்ட் கொலீஜீயம் சமீப காலத்தில் இத்தனை நீதிபதிகளை இடமாற்றம் செய்ததில்லை என்பதால் இது பேசு பொருளாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் இடமாற்றத்தை பரிந்துரைத்துள்ளது.
அதிகபட்சமாக பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 4 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவர்களை அலகாபாத், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களுக்கு இடம்மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளாக உள்ள விவேக் குமார் சிங் சென்னைக்கும், பிரகாஷ் பாடியா, கேசார்வானி, ராஜேந்திரகுமார் ஆகியோர் முறையே ஜார்க்கண்ட், கொல்கத்தா, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களுக்கும் டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர்.
குஜராத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் அங்கிருந்து டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர். இவர்களில் நீதிபதி ஹேமந்த் பிரச்சக் என்பவர்தான் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்துதான் சுப்ரீம் கோர்ட்டை ராகுல் காந்தி அணுக நேரிட்டது. அங்கு அவருக்கு இடைக்காலத் தடை கிடைத்து தற்போது மீண்டும் எம்.பி ஆகியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். நான்கு குஜராத் நீதிபதிகளில் ஒருவரான குமாரி கீதா கோபி சென்னைக்கு மாற்றப்படவுள்ளார்.