அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு.. ஹேமந்த் சோரன் மனுவை.. சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்தது!
Feb 02, 2024,06:18 PM IST
டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடாமல் இங்கு வந்தது ஏன் என்று ஹேமந்த் சோரனுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு புதிய ஆட்சி அமையவுள்ளது. சாம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளது.
இந்த நிலையில் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன், டெல்லி உச்சநீதிமநன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் ஹேமந்த் சோரன். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, உயர்நீதிமன்றத்தைத்தானே நீங்கள் நாடியிருக்க வேண்டும். அங்கு ஏன் போகவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
]
அதற்கு ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இது ஒரு முதல்வராக இருந்தவர் தொடர்பான வழக்கு என்று கூறினார். அதைக் கேட்ட நீதிபதிகள், எல்லோருக்கும் சமமானது நீதிமன்றங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கோர்ட் என்று கிடையாது. உயர்நீதிமன்றமும் அரசியல் சாசனப்படிதான் இயங்குகின்றது என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.