ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே.. பிரமாண்டமாய்.. சசிகலா புதிய வீடு.. கோலாகல கிரகப்பிரவேசம்!

Su.tha Arivalagan
Jan 24, 2024,06:09 PM IST

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட வீட்டுக்கு எதிராக, அவரது உற்ற தோழியான சசிகலா, பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு இன்று கோ பூஜை நடத்தி கிரகப் பிரேவசம் செய்யப்பட்டது.


ஜெயலலிதாவும், சசிகலாவும் கடைசி வரை இணை பிரியாத தோழிகளாக இருந்து வந்தனர். இடையில் சில காலம் பிரிவுகள் எல்லாம் வந்தாலும் கூட, நட்பைப் புதுப்பித்து கடைசி வரை அந்த நட்பை விடாமல் பின்பற்றினார்கள்.




ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கும், முதல்வர் பொறுப்புக்கும் சசிகலா வர முயன்றபோது கட்சி பிளவு பட்டது, சொத்துக் குவிப்பு வழக்கிலும் அவர் சிறைக்குச் செல்ல நேரிட்டது.


சிறைவாசம் முடிந்த பின்னர் புயல் போல மாறுவார் சசிகலா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அப்படி எதையும் செய்யவில்லை. அமைதியாக கப்சிப் என்றாகி விட்டார். அரசியல் செயல்பாடுகளையும் முழுமையாக நிறுத்தி விட்டார். அவ்வப்போது அறிக்கை மட்டும் விட்டபடி இருக்கிறார்.


சமீபத்தில் கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்ற சசிகலா, அங்கு ஜெயலலிதா மணிமண்டபம் கட்டுவதற்கான பூஜைகளைப் போட்டு விட்டு வந்தார். இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்ல வீட்டுக்கு எதிரே, தான் வாங்கியிருந்த இடத்தில் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வந்தார் சசிகலா. 3 மாடிகளுடன் கூடிய இந்த வீடு மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ளதாம்.


புது வீட்டில் புத்துயிர் பெறுமா சசிகலா அரசியல்?


இந்த வீட்டில் இன்று பால் காய்ச்சப்பட்டது. அதிகாலையிலேயே வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் கோ பூஜையும் நடத்தப்பட்டது. வேதா இல்ல வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் சசிகலா. இந்த விழாவில் சசிகலா குடும்பத்தினர், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரமாண்டமான வீடாக இருந்தாலும் சிம்பிளான முறையில் கிரகப்பிரவேசத்தை நடத்தி முடித்துள்ளார் சசிகலா. விரைவில் அவர் இந்த வீட்டுக்கு இடம் பெயரக் கூடும் என்று தெரிகிறது.


இந்த வீட்டுக்கு இடம் பெயர்ந்த பிறகு அவர் அரசியலில் தீவிரம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சமீபத்தில் அவர் கோடநாட்டில் அளித்த பேட்டியின்போது அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்று சேரும் என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே அவர் ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்படவும் தீர்மானித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.