பாஜகவில் முழுமையாக இணைந்தார் சரத்குமார்.. சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார்!
சென்னை: அகில இந்திய சமத்து மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்து விட்டதாக அறிவித்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் முக்கியப் பிரபலமாக விளங்கி வந்தவர் சரத்குமார். ஆரம்பத்தில் நடிகராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர் சரத்குமார். பின்னர் அரசியலுக்கு வந்தார். ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து செயல்பட்டார். இவரது அக்காள் கணவர் கே.பி.கந்தசாமி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் இயல்பாகவே சரத்குமாரும் திமுக பக்கம் சாய்ந்தார்.
1996ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார் சரத்குமார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைச் சந்தித்தார் சரத்குமார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு சரத்குமாரை ராஜ்யசபா தேர்தலில் நிறுத்தி அவரை எம்.பி ஆக்கினார் மறைந்த முதல்வர் கருணாநிதி. ஆனால் 2006ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார் சரத்குமார்.
திமுகவிலிருந்து வெளியேறிய சரத்குமார் அதன் பின்னர் அதிமுகவுடன் இணைந்தார். மனைவி ராதிகாவுடன் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தார். 2006ல் நடந்த அந்தத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைத் தழுவியதால் சரத்குமாரும் அப்படியே அமைதியாகி விட்டார்.
அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் 2007ம் ஆண்டு அவர் அகில சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். அவருடன் எர்ணாவூர் நாராயணன், கரு நாகராஜன் உள்ளிட்டோரும் அதில் இடம் பெற்றனர். ஆனால் காலப் போக்கில் நாராயணன் விலகி தனி கட்சி தொடங்கினார். நாகராஜன், பாஜகவுக்குப் போய் விட்டார்.
சமத்துவ மக்கள் கட்சி தொடங்கிய பின்னர் எந்த ஒரு தேர்தலிலும் சரத்குமாரோ அவரது கட்சியினரோ வெற்றி பெற்றதில்லை. அரசியல் களத்தில் இருந்து வந்தார் சரத்குமார், அவ்வளவுதான். தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்திருந்தார் சரத்குமார். ஆனால் தற்போது கட்சியையே பாஜகவுடன் இணைத்து அதிரடி காட்டியுள்ளார்.
இத்தனை கால அரசியல் வாழ்க்கையில் ஒரு முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ளார். அதேபோல தென்காசி சட்டசபைத் தொகுதியில் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.