இன்று ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி... நினைத்தது நிறைவேற இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க

Aadmika
Jun 25, 2024,10:00 AM IST

சென்னை : திதிகளில் நான்காவது திதியாக வரக் கூடிய சதுர்த்தி திதி, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய நாளாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியையே நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். எப்படிப்பட்ட தீர்க்க முடியாத துன்பங்கள், மனவேதனைகள், வெளியில் சொல்ல முடியாத தர்மசங்கடங்கள் இருந்தாலும் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டாலோ அல்லது மாலையில் நடக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டாலோ விநாயகரின் அருளால் அனைத்து துன்பங்களும் குறையும்.


சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :




சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை, அவல், பொரி, பால், பழம் ஆகிய ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். எதுவும் முடியவில்லை என்றால் எளிமையாக இரண்டு வாழைப்பழங்கள் படைத்து வழிபடலாம். மாலையில் சந்திர உதயத்திற்கு பிறகு நடக்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகரை வழிபடலாம். விநாயகரை வழிபட்டு, சந்திரனையும் வழிபடுவதால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கும். 


சங்கடஹர சதுர்த்தி அன்று ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் படித்தது மிகவும் சிறப்பானது. ஓம் கம் கணபதியே நமஹ என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை கூறி வழிபடலாம். விநாயகரை வலம் போது 27 அல்லது 108 முறை இந்த மந்திரத்தை சொல்வது சிறப்பு.


நினைத்ததை நிறைவேற்றும் பரிகாரம் :


ஜூன் 25ம் தேதியான இன்று ஆனி மாதத்திற்கான தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியாகும். இன்று நாள் முழுவதும் சதுர்த்தி திதி உள்ளதால், ஒரு சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறும், விநாயகரிடம் கேட்ட வரங்கள் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு மிளகு மட்டும் இருந்தால் போதும். மிக எளிமையான பரிகாரமாக இருந்தாலும், இது சக்தி வாய்ந்த பரிகாரமாகும். விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி நாளில் இதை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.


இன்று கோவிலுக்கு செல்லும் போது 3 மிளகுகளை கையில் எடுத்துச் செல்லுங்கள். வீட்டிற்கு அருகில் அரச மரத்தடி விநாயகர் இருந்தால் அவரை மூன்று முறை சுற்றி வந்து, உங்கள் கையில் இருக்கும் மிளகை உங்களின் தலையை சுற்றி, விநாயகருக்கு பின்புறம் சென்று, அரச மரத்தடியில் போட்டு விடுங்கள். ஒருவேளை அரச மர விநாயகர் இல்லை என்றால், அருகில் இருக்கும் ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று இதே போல் 3 முறை சுற்றி வந்து, விநாயகரின் பின்புறம் சென்று ஏதாவது மரம் இருந்தால் அதற்கு கீழ் இந்த மிளகுகளை போட்டு விடலாம். இப்படி செய்வதால் சனியால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, நீங்கள் நினைத்த காரியங்கள் விரைவில் நடக்கும்.


தானம் செய்ய வேண்டியவை :


முடிந்தால் கோவிலுக்கு செல்லும் போது சிறிது பச்சரிவு அல்லது பச்சரிசி மாவில், சர்க்கரை கலந்து எடுத்துச் சென்று, விநாயகர் கோவிலில் இருக்கும் மரத்தடியில் தூவி விடுங்கள். அவற்றை எறும்புகள் வந்து சாப்பிடும் போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி பலனும் உங்களுக்கு கிடைக்கும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.