கிறிஸ்தவம், இஸ்லாம் வருவதற்கு முன்பிருந்தே இருப்பது சனாதனம்.. அண்ணாமலை

Su.tha Arivalagan
Sep 03, 2023,02:59 PM IST
சென்னை: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ளது. பாஜகவினர், இந்து அமைப்புகள் இதைக் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இதை பெரிய பிரச்சினையாக பேசி வருகின்றனர்.



தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சனாதன தர்மம் என்ற வார்த்தை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருக்கின்றது.  சனாதன தர்மம் என்றால் இறைமை காலத்துக்கும் அப்பாற்பட்ட தர்மம் என்று பொருள். காலம் காலமாக இருந்து வருவது இது.

உதயநிதிஸ்டாலின் பேசியதை இந்தியாவின் 142 கோடி மக்களும் கடுமையாக கண்டிக்க வேண்டும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இது.  முன்பே தயாரிக்கப்பட்ட ஒரு பேச்சை, துண்டுச் சீட்டைப் பார்த்துப் படித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு  குறிப்பிட்ட கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது இனப் படுகொலையாகும். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதற்கு உதயநிதி ஸ்டாலின் யார் என்று கேட்டுள்ளார் அண்ணாமலை.