குதிரை மேலே கம்பீரமாக.. சவால்களில் ஜம்மென்று சவாரி செய்யும் "சுயம்பு" சம்யுக்தா!

Su.tha Arivalagan
Feb 12, 2024,06:20 PM IST

சென்னை: வாழ்க்கையில் எப்போது ஜெயிப்போம் தெரியுமா.. சவால்களை சட்டென்று எதிர்கொண்டு சடாரென்று சுதாரித்து, அதை வெல்லும்போதுதான்.. நாம் ஜெயிப்போம், ஜெயிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு தில்லான பெண்தான் சம்யுக்தா.


தமிழ் சினிமாவில் சவாலான வேடங்களில் நடிக்கும் சில நடிகைகளில் சம்யுக்தாவும் ஒருவர். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் அவரது ரோல்கள் அழுத்தமாக இருக்கும். சம்பந்தமில்லாமல், உப்புச் சப்பில்லாத ரோல்களில் அவர் நடிப்பதே இல்லை. 




கேரக்டர்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து நடித்து வரும் சம்யுக்தா இப்போது பான் இந்தியா படம் ஒன்றில் அசத்தலான ரோலில் நடிக்கவுள்ளார் சம்யுக்தா. இதற்காக அவர் நிறைய மெனக்கெடுகிறாராம். அதை அவரே பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் தனது இருபதாவது படமான 'சுயம்பு'வில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சி எடுத்தார் நடிகர் நிகில். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அவரின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும்.  


அவருடன் நடிகை சம்யுக்தாவும் சில சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதற்காக குதிரையேற்றம் கற்கும் பயணத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அடுத்த படமான 'சுயம்பு'வுக்காக நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுப் பயணம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் குதிரையுடன் இணக்கமாக பழகி இந்தப் பயணத்தை கற்று வருகிறேன். இதற்காக ஒரு குழுவாக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவது அழகாகவும் இருக்கிறது என்றார் சம்யுக்தா.




சம்யுக்தா மேலும் கூறுகையில், இந்த ஆண்டு என்னைப் பற்றி நானே நிறைய அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அது எனது வாழ்க்கையை மேலும் அழகாக்கியுள்ளது, வலுவாக்கியுள்ளது.  வாழ்க்கையில் எப்போதுமே சாகசத்திற்குத் தயாராக இருப்பவள் நான். எனக்கு எப்போதுமே கம்பர்ட் ஜோன் பிடிக்காது. எப்போதுமே புதிய அனுபவங்களுக்குள் என்னை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பவள் நான்.


ஒவ்வொரு வீழச்சியும்  வெற்றிக்கான படிக்கட்டாக நினைப்பேன், அதை தடையாக நினைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சம்யுக்தா.


தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான தயாரிப்புடன் 'சுயம்பு' படம் உருவாகிறது. 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நிகில் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.