சஸ்பென்ஸ் முடிந்தது.. ஜார்க்கண்ட் முதல்வராக.. முதல்வராக இன்று பதவியேற்கிறார் சாம்பாய் சோரன்!

Su.tha Arivalagan
Feb 02, 2024,09:12 AM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சஸ்பென்ஸ் முடிவடைந்து விட்டது. சாம்பாய் சோரனை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று சாம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். 


67 வயதான சாம்பாய் சோரன் முதல் முறையாக முதல்வராக பதவியேற்கிறார். கடந்த ஹேமந்த் சோரன் ஆட்சியின்போது அவர் போக்குவரத்து அமைச்சராாக பதவி வகித்து வந்தார்.


ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்து, அவரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆன நிலையில் நேற்று இரவு ஆளுநர், சாம்பாய் சோரனை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.




முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அனைவரும் வீடு திரும்பினர். இந்த நிலையில்தான் தற்போது ஆளுநரின் அழைப்பும் வரவே, ஜேஎமஎம் கூட்டணி மகிழ்ச்சியடைந்துள்ளது.


81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஜேஎம்எம் கூட்டணிதான் தனிப் பெரும் கட்சியாக உள்ளது. இக்கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்தக் கூட்டணிக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.


முன்னதாக சாம்பாய் சோரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் அனைவரையும் நிறுத்தி வைத்து அதை வீடியோ எடுத்து அந்த வீடியோவும் வைரலானது. அதில் இடம் பெற்றிருந்த சாம்பாய் சோரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், ஒன்று, 2, 3 ரோல் கால் போல சொன்னது குறிப்பிடத்தக்கது.