தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பதா.. ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் கண்டனம்..!

Su.tha Arivalagan
Nov 13, 2023,04:35 PM IST

மும்பை: தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது அபாயகரமானது. படத்தை யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ரசித்துப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகர் சல்மான் கான்.


சல்மான் கான் - கத்ரீனா கைப் நடித்துள்ள  படம் டைகர் 3. தீபாவளிப் பண்டிகையையொட்டி இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தை சல்மான் கான் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராகப் போய் தியேட்டருக்குள்ளேயே வெடி வெடித்து அதகளப்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. படம் தொடங்கியது முதலே ஆரவாரமாக இருந்தது. அப்போது சில ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே வெடிகளை வெடிக்கத் தொடங்கினர். புஸ்வாணம் விட்டனர். ராக்கெட்டுகளை கொளுத்தினர். அது தாறுமாறாக தியேட்டருக்குள் போய் வெடித்தது.




அந்த இடமே போர்க்களம் போல மாறியது. பயந்து போன ரசிகர்கள் பலர் அந்த இடத்தை விட்டு அலறி அடித்து ஓடினர். மிகப் பெரிய அசம்பாவிதமாக இது மாறியிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் முடிந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சில ரசிகர்களைக் கைது செய்துள்ளனர்.


இதேபோல மாலேகான் பகுதியிலும் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சல்மான் கான் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், தியேட்டரில் பட்டாசுகள் வெடித்ததாக வந்த செய்தி குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது அபாயகரமானது. யாருக்கும் தொந்தரவு தராமல் படத்தைப் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சல்மான் கான்.