சேலம் இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் ஈசன் உலக உயிர்களுக்கு படியளந்த உற்சவம்

Swarnalakshmi
Dec 23, 2024,10:16 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சேலம் : சேலம் பொன்னம்மாப்பேட்டை ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் சிவ பெருமான் உலக உயிர்களுக்கு படியளந்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


உலகிற்கே தலைவனாக திகழும் சிவபெருமான் தினமும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளப்பதாக ஐதீகம். புராண கதைகளின் படி, தினமும் கைலாயத்தில்  இருந்து புறப்பட்டு, உலக உயிர்களுக்கு படி அளப்பதற்காக சிவ பெருமான் செல்வார். இதை கண்ட பார்வதி தேவிக்கு தினமும் ஈசன் அனைத்து உயிர்களுக்கு முறையாக உணவு வழங்குகிறாரா என்ற சந்தேகம் வந்தது. இதனால் ஈசனை சோதிக்க நினைத்த பார்வதி தேவி, இரண்டு கட்டெறும்புகளை பிடித்து ஒரு பெட்டியில் அடைத்து மறைத்து வைத்தார். 




உலக உயிர்களுக்கு படியளந்து விட்டு கைலாயம் திரும்பிய ஈசனிடம், "அனைத்து உயிர்களுக்கும் இன்று உணவளித்து விட்டீர்களா?" என கேட்டார். ஆமாம் என பதிலளித்தார் ஈசன். அதை மறுத்த பார்வதி தேவி, தான் மறைத்து வைத்திருந்த பெட்டியை ஈசனிடம் காட்டி, "இந்த உயிர்களுக்கு உணவு அளித்தீர்களா?" என கேட்டார். அப்போது அந்த பெட்டியை திறந்து பார்த்த பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தார். பெட்டிக்குள் இருந்த எறும்புகள் இரண்டின் வாயிலும் அரிசிகள் இருந்தன. உலகிற்கே தந்தையான இறைவனை தான் சோதிக்க நினைத்ததற்கான ஈசனிடம் மன்னிப்பும் கேட்டார். இறைவனே உலக உயிர்கள் அனைத்திற்கும் தினமும் உணவு அளிப்பதை உயிர் மக்கள் அனைவரும் நன்றியுடன் நினைக்க வேண்டும் என்பதற்காக, இந்த சம்பவத்தை உலக மக்கள் முக்கிய உற்சவமாக கொண்டாடும் படி சிவ பெருமானிடம் கேட்டுக் கொண்டார்.


மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் தான் ஈசன், உலகிற்கு படியளந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த உற்சவம் சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி திதி துவங்கும் நாளான டிசம்பர் 22ம் தேதியன்று நேற்று நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்விற்காக கோவிலுக்கு அரிசி வாங்கி கொடுத்தனர். இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் சிவன் சன்னதி முன்பாக ஓம் வடிவில் அரிசியால் எழுதி, அதில் விளக்கேற்றி வைத்தனர். பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த அரிசி இறைவனுக்கு படைக்கப்பட்டு, பிறகு அந்த அரிசியில் ஒவ்வொரு பிடியும், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


இறைவனுக்கு நமக்கு படி அளந்த அரிசியை நாம் பெற்றுக் கொண்டதாக ஐதீகம். இந்த அரிசியை வீட்டில் சமைப்பதற்காக பயன்படுத்தும் அரிசியுடன் கலந்து உணவு சமைத்து சாப்பிட்டால் நம்முடைய வாழ்விலும் உணவிற்கு எப்போதும் குறைவில்லாமல், சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும் என்று நம்பிக்கை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்