Tirupati.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுக்கள் விற்பனை.. அசர வைக்கும் பக்தர்களின் நம்பிக்கை..!

Su.tha Arivalagan
Sep 25, 2024,10:53 AM IST

திருப்பதி:   லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சர்ச்சை வெடித்த நிலையிலும் கூட திருப்பதி கோவிலில் லட்டு விற்பனை அமோகமாக நடைபெறுகிறதாம். சலசலப்பு இன்னும் ஓயாத நிலையிலும் கூட  கடந்த 4 நாட்களில் மட்டும் 14 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பிரசாதம் பிரபலமாக இருக்கும். அது கோவில் பிரசாதமாக மட்டுமல்லாமல் அந்த ஊரின், அந்த மாநிலத்தின் அடையாளமாகவும் மாறிப் போயிருக்கும். உதாரணத்திற்கு பழனி என்றால் பஞ்சாமிர்தம்தான் ஞாபகத்திற்கு வரும். பக்தர்களாக இல்லாதவர்களும் கூட பஞ்சாமிர்தம் சாப்பிட ஆசைப்படுவார்கள். அதேபோலத்தான் திருப்பதி லட்டு பிரசாதமும், லட்டு என்றதுமே திருப்பதிதான் முதலில் நினைவுக்கு வரும். நாத்திகர்களும் கூட விரும்பி சாப்பிடும் லட்டு, திருப்பதி லட்டுதான். அந்த அளவுக்கு நம்முடைய உணர்வுடன் கலந்தது திருப்பதி லட்டு.


காலம் காலமாக மக்களால் விரும்பி உண்ணப்பட்டு வந்த திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கிளப்பிய சில குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை மக்கள் மனதில் எழுப்பி விட்டது. கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக அவர் கூறியதுதான் பெரும் அதிர்ச்சிக்குக் காரணம். இதுதொடர்பாக தற்போது வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்துள்ளன. மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.




இப்படி சர்ச்சை ஒரு பக்கம் களை கட்டியிருந்தாலும் கூட மறுபக்கம் திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்ந்து அமோகமாக விற்பனையாகி வருகிறதாம். விற்பனையில் எந்த ஒரு சரிவும் காணப்படவில்லை தேவஸ்தானம் கூறியுள்ளது. குறிப்பாக லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மை நிலைநிறுத்தப்பட்டு விட்டதாக தேவஸ்தானம் அறிவித்த நிலையில் விற்பனை மேலும் உயர்ந்து வருகிறதாம். கடந்த 4 நாட்களில் மட்டும் 14 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. திருப்பதி கோவில் குறித்தும், லட்டு பிரசாதம் மீதான தங்களின் நம்பிக்கையும் இன்னும் தகரவில்லை. அப்படியேதான் இருக்கிறது என்பதை இது நிரூபிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


செப்டம்பர் 19ம் தேதி மட்டும் 3.59 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகின. 20ம் தேதி 3.17 லட்சம், 21ம் தேதி 3.67 லட்சம், 22ம் தேதி 3.60 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகியுள்ளன. வழக்கமாக சராசரியாக தினசரி 3.50 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே லட்டுக்கள் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


விஜயாவாடாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், பக்தர்கள் எப்போதும் திருப்பதி லட்டு மீதான நம்பிக்கையை விட மாட்டோம். உண்மையில் முன்பை விட தற்போது லட்டு நல்ல சுவையுடனும், வாசத்துடனும் உள்ளது என்றார்.


திருப்பதியில் மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட அனைத்து திருப்பதி தேவஸ்தான அலுவலகங்கள், கோவில்களிலும் கூட லட்டு விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லையாம். சென்னைக்கு மட்டும் தினசரி 10,000 லட்டுக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறதாம். அது வழக்கம் போல தொடருவதாகவும், அதில் குறைவு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்கு வெளியே அதிக அளவிலான லட்டுக்கள் விற்பனை செய்யப்படுவது சென்னையில் உள்ள திருப்பதி கோவிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


திருப்பதி லட்டு பிரசாதம் கடந்த 1715ம் ஆண்டு முதல் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்டு வருகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரியம் தொடர்கிறது. இதுவரை பெரிய அளவில் சர்ச்சையைச் சந்திக்காமல் இருந்தது லட்டு. இப்போதைய சர்ச்சைதான் திருப்பதி லட்டு சந்தித்த முதல் பெரிய பிரச்சினையாகும். திருப்பதி கோவில் வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சமையல் அறையில்தான் லட்டு பிரசாதம் தயாராகிறது. இதை தயாரிக்க பல்வேறு விதமான விதிமுறைகளையும், கெடுபிடியான நடைமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள்.


தினசரி லட்டு தயாரிiக்க 15,000 கிலோ பசு நெய் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர 750 கிலோ முந்திரிப் பருப்பு, 500 கிலோ ரெய்சின், 200 கிலோ ஏலக்காய் ஆகியவை லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வருடத்திற்கு லட்டு பிரசாத விற்பனை மூலம் மட்டும் ரூ. 500 கோடி வருவாயை திருப்பதி தேவஸ்தானம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடக்கது. கடந்த 300 ஆண்டு கால வரலாற்றில் லட்டு தயாரிப்பு முறையில் மொத்தமே 6 முறைதான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது இன்னொரு உபரித் தகவல்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்