அம்மா உணவகம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. ஹேப்பி நியூஸ் சொன்ன சென்னை மாநகராட்சி!

Manjula Devi
Jul 02, 2024,07:59 PM IST

சென்னை:   சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க சென்னை மாநகராட்சி  உத்தரவிட்டுள்ளது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவுகள் வழங்குவதன் மூலம்  ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு இட்லி,பொங்கல், தயிர் சாதம், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம், போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. 




சமீபத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தவும், புதிய உணவு வகைகளை மாற்றவும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும்  392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.அதில் சுமார் 3,100 ஊழியர்கள் உள்ளனர். ஆனால் அதிமுக ஆட்சியில் ஊழியர்கள் ஊதிய உயர்வு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஊதிய உயர்வு அளிக்காமல் கோரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் தற்போது அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலியை ரூ. 300-ல் இருந்து 325 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வால் ரூபாய் 3.7 கோடி கூடுதலாக செலவு செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் எட்டு வருடம் கழித்து தினக்கூலி 300 லிருந்து 325 ஆக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


உயர்த்தப்பட்ட இந்த புதிய ஊதியத்தை ஜூன் மாத ஊதியத்துடன் சேர்த்து உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அரியர் தொகையையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் எனவும் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.