30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடக் காத்திருந்தோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

Su.tha Arivalagan
Nov 20, 2024,09:47 AM IST

சென்னை: எங்களது 30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடக் காத்திருந்தோம். ஆனால் அது கை கூடாமல் போய் விட்டது என்று இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


யாருமே கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு சம்பவம் நேற்று இரவு நடந்து விட்டது. இன்னும் கூட பலராலும் இதை நம்ப முடியவில்லை. தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தனது வக்கீல் மூலம் வெளியிட்ட அறிவிப்பு பலரது இதயங்களையும் உடைத்து விட்டது. நிஜமாவா என்ற கேள்விதான் என்று பலருக்கும் தோன்றியது. ஒரு வேளை வதந்தியாக இருக்குமோ என்றுதான் பலரும் முதலில் நினைத்தனர். ஆனால் உண்மை என்று தெரிந்ததும் பலருக்கும் இது அதிர்ச்சிதான்.




சமீப காலமாகவே திரைத்துறையில் விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. திரைத்துறை என்று இல்லை, ஒட்டுமொத்தமாகவே மக்களிடையே இணைந்து வாழும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பல காரணங்கள் இதற்கு சொல்லலாம். ஆனால் முன்பை விட பல மடங்கு விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. முன்பு போல இப்போது யாரும் தயங்குவது இல்லை, சகித்துக் கொண்டிருக்கவும் விரும்புவதில்லை. பிடிக்கவில்லை, ஒத்து வரவில்லை என்ற நிலை வரும்போது உடனடியாக விவாகரத்துக்குப் போய் விடுகிறார்கள். இதில் யாரையும் நாம் குறை சொல்வதற்கில்லை.. காரணம், அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பம்.


ஆனால் நமக்குப் பிடித்தமானவர்கள் பிரியும்போதுதான் பெரும் வேதனை ஏற்பட்டு விடுகிறது. அப்படித்தான் கோடானு கோடி தமிழர்களின் இதயங்களில் வீற்றிருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது பாடல்களுக்கு பலரும் அடிமையாகவே உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் விவாகரத்து முடிவுக்குப் போகிறார் என்றால் அது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதில் வியப்பு இல்லைதான்.


இத்தனைக்கும் மிக மிக மனம் ஒத்த தம்பதியாக வலம் வந்தவர்கள் இவர்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட தனது மனைவியுடன் மேடையில் தோன்றினார் ரஹ்மான். அப்படி ஒரு அழகான காட்சி அது. ஆனால் அவர்கள் பிரியப் போகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.


இந்த நிலையில் தனது மனைவியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு எக்ஸ் பதிவைப் போட்டிருந்தார். அதில், 30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடுவோம் என நம்பினோம், ஆனால் விஷயங்கள் வேறு மாதிரியாகப் போய் விட்டது. பார்க்க முடியாத அது எட்டி விட்டது. உடைந்து போன இதயங்களின் பளுவைத் தாங்க முடியாமல், கடவுளின் அரியாசனமே நடுங்கிப் போய் விடும். இது எங்களை சிதறடிப்பதாக இருந்தாலும் கூட, உடைந்த  சிதறல்களை மீண்டும் அதனதன் இடத்தில் ஒன்று சேர்ப்பது கடினம். 


எங்கள் மீது அன்பும், அக்கறையும் காட்டிய நண்பர்களுக்கும், அனைவருக்கும் நன்றி. மிகவும் துயரமான நேரத்தில் நாங்கள் இருக்கும் இந்த சமயத்தில் எங்களது பிரைவசியை மதிப்பதற்கும் நன்றி என்று கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்