Makara Jyothi 2025: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் மகரஜோதி .. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை : சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் சபரிமலையை சுற்றி உள்ள 18 மலைகளிலும் முழங்க கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 30ம் தேதி துவங்கி, மகரஜோதி மகோற்சவம் நடைபெற்று வந்தது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் மகரஜோதி மகோற்சவத்தவத்தின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் சபரிமலையில் மகர சங்கராந்தி தினமான இன்று (ஜனவரி 14) மாலை நடைபெற்றது. மகரவிளக்கு உற்சவத்தை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்ட திருவாபரணப் பெட்டி ஊர்வலம், இன்று மாலை ஆறரை மணி அளவில் சபரிமலை சன்னிதானத்தை வந்தடைந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் சூட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
திருவாபரணப் பெட்டி வருகையை அடுத்து பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக ஜனவரி 14ம் தேதியான இன்று ஆன்லைன் மூலம் பதிவு செய்த 40,000 பக்தர்கள் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் வந்த 1000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்திருந்தது. இருந்தாலும் பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர ஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர். மகரஜோதியை தரிசிப்பதற்காக 12 க்கும் அதிகமான இடங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இருந்தாலும் முக்கிய இடமான பம்பை ஹில்டாப் பகுதியிலேயே அதிகமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
கிட்டதட்ட ஒன்றரை லட்சம் பக்தர்கள் மகரஜோதியை காண சபரிமலைக்கு வருவார்கள் என தேவசம் போர்டு தலைவர் கூறி இருந்த நிலையில் ஏற்கனவே ஒன்றரை லட்சம் பேர், சாமி தரிசனம் முடிந்த பிறகும் கடந்த 4 நாட்களாக சன்னிதானம் பகுதியிலேயே தங்கி உள்ளனர். இது தவிர ஜனவரி 13ம் தேதியான நேற்று மாலை 6 மணி வரை 64,194 பேர் மலையேறி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5000 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருவாபரணப் பெட்டி பதினெட்டு படிகளை கடந்து, சன்னிதானம் வந்தடைந்தது. அதில் இருந்த ஆபரணங்கள் சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் தெரிந்தது. இன்று காலை முதலே சபரிமலை எங்கும் சரண கோஷம் அதிகமாக ஒலித்து வரும் நிலையில், திருவாபரணப் பெட்டி சன்னிதானம் வந்தடைந்ததும், சன்னிதானத்தில் கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் சரணம் கோஷம் எழுப்ப, சரியாக மாலை 6.50 மணியளவில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி அளித்தது. சிறிது நேர இடைவெளியில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியை கண்டு பரவசமடைந்த ஐயப்ப பக்தர்கள் கண்களில் கண்ணீர் பெருக, சரண கோஷம் முழங்க சாமி ஐயப்பனை வேண்டி நின்றனர்.
சபரிமலை மகர ஜோதியைக் கண்டு களிக்க தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் சபரிமலைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்