மகரவிளக்கு பூஜை 2024 : இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... குவிந்த ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு திருவிழாவிற்காக டிசம்பர் 30ம் தேதியான இன்று மாலை கோவில் நடைதிறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சாமி ஐயப்பனை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் மலையேறுவதற்கு தயாராக காத்திருக்கிறார்கள்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜை காலம் நடைபெற்று வந்தது. டிசம்பர் 25ம் தேதி சாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. டிசம்பர் 26ம் தேதி பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மகர விளக்கு திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை டிசம்பர் 30ம் தேதியான இன்று மாலை 4 மணியளவில் திறக்கப்பட உள்ளது. கோவிலில் மேல்சாந்தி எஸ்.அருண்குமார் நம்பூதிரி, தலைமை அர்ச்சகரான தந்திரி கண்டரேரு ராஜீவரு முன்னிலையில் கோவிலை நடையை திறந்து, பூஜைகள் நடத்துவார். சன்னதி அருகில் உள்ள ஆழியில் மேல்சாந்தி தீயை எரிய வைக்கும் சடங்கு முடிந்ததும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று, சாமி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே மண்டல பூஜையின் போது தொடர்ந்து 41 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மகரவிளக்கு திருவிழாவிற்காக 21 நாட்கள் தொடர்ந்து கோவில் நடை திறந்திருக்கும். ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி அன்று மாலை 6 மணியளவில் பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக சாமி ஐயப்பன் காட்சி தரும் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அதற்கு பிறகு மகர மாத பூஜைகளுக்காக ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஆனால் ஜனவரி 19ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனவரி 19ம் தேதி மாலையுடன் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தப்படும். ஜனவரி 20ம் தேதி நடைபெறும் பூஜையில் தேவசம் போர்டு நிர்வாகிகள், பந்தள ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள். அன்று இரவு 7 மணியளவில் சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். பிறகு மீண்டும் மாசி மாத பிறப்பின் போது மட்டுமே ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்ட மண்டல கால பூஜையின் போது 32.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்திருந்தது. இது கடந்த ஆண்டை விட 4 லட்சம் பக்தர்கள் அதிகம். இதனால் மகரவிளக்கு திருவிழாவின் போதும் சாமி ஐயப்பனை தரிசிக்க ஏரளாமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்