Swamiye Saranam Ayyappa.. கதையல்ல நிஜம்.. ஐயப்பனும், இயேசு கிறிஸ்துவும் சேர்ந்து ஆசிர்வதித்த தருணம்

Swarnalakshmi
Dec 09, 2024,10:26 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும். அனுபவங்கள் இல்லாமல் வாழ்க்கை ஏது.. அனுபவங்கள்தானே நம்மை பட்டைத் தீட்டி ஜொலிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் இது.


1980களில் நடந்த உண்மை சம்பவம்... சிறு வயது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


அப்பாவிற்கு சபரிமலைக்கு மாலை அணியும் வழக்கம் இருந்ததால், சிறு வயது முதலே எனக்கும் சுவாமி ஐயப்பன் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது. ஒவ்வொரு வருடமும் அப்பா மாலை அணியும் போதும் எனக்கும் மாலை அணிந்து சபரிமலை செல்ல வேண்டும் என்ற ஆசை வரும். உடனே அப்பாவிடம் சென்று, "அப்பா, என்னையும் சபரிமலை கூட்டிட்டு போ" என்பேன்.




சிறு வயது என்பதால் அடுத்த ஆண்டு, அடுத்த ஆண்டு என சொல்லி வந்தார் அப்பா. இறுதியாக என்னுடைய 10 வது வயதில் என்னுடைய பல ஆண்டு சபரிமலை யாத்திரை கனவு நனவானது. அப்பா பலமுறை சென்றிருக்கிறார் என்றாலும், மாலை அணிவது, கருப்பு ஆடை அணிவது, விரதம் இருப்பது என அனைத்தும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதே போன்ற ஒரு கார்த்திகை மாதத்தில் நானும் எனது அப்பாவும் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து கொண்டோம். 


நான் படித்தது கிறிஸ்தவ பள்ளி என்பதால் ஷூ அணியாமல், யூனிபார்ம் அணியாமல் பள்ளி சென்றதால், பள்ளி விதிமுறைகளை மீறி நடப்பதாக முதலில் தலைமை ஆசிரியர் ஆட்சேபம் தெரிவித்தார்.  பிறகு என் அப்பா வந்து பேசி சமாதானம் செய்ததால், பள்ளியில் ஏற்றுக் கொண்டார்கள். இதனால் பள்ளி படிப்புடன், என்னுடைய ஐயப்ப விரதமும் தொடர்ந்தது.


நான் ஆவலுடன் எதிர்பார்த்த சபரிமலை யாத்திரை புறப்படும் அந்த நாள் வந்தது.  ஆவலுடனும், பக்தியுடன் கன்னி சாமியாக இருமுடி சுமந்து அப்பாவுடன் சபரிமலை புறப்பட்டேன். "சாமியே சரணம் ஐயப்பா" என்ற முழக்கத்துடன் பயணம் தொடர்ந்தது. அந்த வயதிலேயே நான் டைரியில் சிறு குறிப்பு எடுத்துக் கொண்டே சென்றேன். எத்தனை கி.மீ., பயணம் செய்தோம், எங்கெல்லாம் சென்றோம் என்பது உள்ளிட்ட விபரங்களை அதில் குறித்து வைத்திருந்தேன். செல்லும் வழியில் நாங்களே உணவு சமைத்து சாப்பிட வேண்டும். சபரிமலையில் நாங்கள் தங்கும் இடங்களில் எங்கு தோண்டினாலும் தண்ணீர் ஊற்றாக வரும். அந்த தண்ணீரை வடிகட்டி, சமையலுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொண்டோம். சபரிமலையில் எங்கு தோண்டினாலும் தண்ணீர் ஊற்றுகள் வந்ததை பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. 


எரிமேலி, அழுதா, கரிமலை, பம்பை, நீலிமலை ஆகியவற்றை கடந்து இறுதியாக சபரிபீடத்தை அடைந்தோம். சிறு வயது என்பதால் காலை முதலே உணவு சாப்பிடாமல் விரதம் இருந்ததால் சரியாக பதினெட்டாம் படி ஏறி மேலே செல்லவும், எனக்கு மயக்கம் வரவும் சரியாக இருந்தது. தலையில் இருந்த இருமுடியின் பிடியை சிறிதும் நழுவ விடாமல் அப்படியே என் அப்பாவின் மடியில் சரிந்தேன். நான் மயங்கி கீழே சரியும் அந்த சமயத்தில்,  "ஐயப்பா, என் பிள்ளையை காப்பாற்று" என என் அப்பா கூச்சலிட்டது என் காதில் ஒலித்தது.


என் அப்பா அழைத்ததும் அவர் குரல் கேட்டு அந்த ஐயப்பனே வந்தது போல், எங்கிருந்தோ ஒருவர் கையில் பன்னீர் பாட்டிலுடன் வந்து, எனக்கு குடிக்க கொடுத்தார். அந்த பன்னீரையும் நான் எப்படி குடித்து முடித்தேன் என்றே தெரியவில்லை. பன்னீரை குடித்ததும் எனக்கு உடலில் புது தெம்பு வந்தது போல் இருந்தது.  அந்த தெம்புடன் சுவாமி ஐயப்பனை காண சென்றோம். அந்த கூட்ட நெரிசலான சமயத்திலும் எனக்கு இரு முறை ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.    


பயணத்தின் போது கிடைத்த அனைத்து அனுபவங்களையும் அந்த டைரியில் குறித்து வைத்துக் கொண்டே வந்தேன். எங்களின் சபரிமலை பயணம் நல்லபடியாக முடித்து, வீடு திரும்பினோம். மீண்டும் பள்ளிக்கு சென்ற போது, அந்த பயண குறிப்பு இருந்த டைரியை என் வகுப்பு ஆசிரியையிடம் காட்டினேன். அவர் அதை பார்த்து விட்டு, நேராக என்னை தலைமை ஆசிரியையிடம் அழைத்துச் சென்றார். ஏதோ தவறு செய்து விட்டோமோ என மனதிற்கு பயம் வர துவங்கி விட்டது. ஆனால் நான் பயந்தது போல் எதுவும் நடக்காமல், என் தலைமை ஆசிரியையோ அந்த டைரி குறிப்புகளை பார்த்து, படித்து, வியந்து போனார்.


இந்த வயதில் கி.மீ., கணக்கு, நாங்கள் பயணம் செய்த கார் எத்தனை கி.மீ., வேகத்தில் சென்றது, என்ன சாப்பிட்டோம், யாத்திரையின் வழியில் எந்த ஊரில் சாப்பிட்டோம் என்பது போன்ற தகவல்களை நான் துல்லியமாக குறித்து வைத்திருந்ததை படித்து தலைமை ஆசிரியை வியந்து போனார். அவர் என்னுடைய நெற்றியில் கிராஸ் போட்டு பாராட்டினார். "God bless you my child" என பாராட்டினார். இதை கேட்டதும் ஐயப்பனும், இயேசு கிறிஸ்துவும் என்னை ஆசீர்வதித்ததாக மனதில் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.


மதங்கள் எல்லாம் மனசு சம்பந்தப்பட்டவை.. ஆனால் ஆசிர்வாதங்கள்.. எல்லாக் கடவுளும் ஒரே மாதிரியாகத்தானே ஆசிர்வதிக்கும்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்