39 நாட்களில் சபரிமலை வருமானம் ரூ.204.30 கோடி.. ஆனால் கடந்த வருடத்தை விட  ரூ. 63 கோடி கம்மி!

Aadmika
Dec 26, 2023,06:31 PM IST

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 39 நாட்களில் உண்டியல் வசூல் மூலம் ரூ.204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரூ.63 கோடி குறைவு தான் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 17ம் தேதி திறக்கப்பட்டது. மண்டல பூஜை துவங்கியதில் இருந்தே கடும் மழை, பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். 


டிசம்பர் 6ம் தேதிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். பல பக்தர்கள் 22 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்ய முடியாததால், சுவாமி தரிசனம் செய்யாமலேயே திரும்பி சென்றுள்ளனர்.




ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பக்தர்கள் கூட்டமும் சரி, உண்டியல் வருமானமும் சரி இந்த ஆண்டு குறைவாகவே கிடைத்துள்ளது சமீபத்தில் தேவசமண போர்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 41 நாட்களாக நடைபெற்று வந்த சபரிமலை மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதியான நாளையுடன் நிறைவடைய உள்ளது. நாளை மாலை மண்டல பூஜை நடத்தப்பட்டு, இரவு 11 மணியுடன் கோவில் நடை சாத்தப்படும். அதன் பிறகு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். 


ஜனவரி 15ம் தேதி மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 20ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 21ம் தேதி காலை நடைபெறும் பூஜையில் பந்தள மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு, மீண்டும், மாசி மாத பிறப்பின் போதே மீண்டும் நடைதிறக்கப்படும்.


டிசம்பர் 25ம் தேதியுடன் நிறைவடைந்த மண்டல பூஜை காலத்தில் 39 நாட்களில் ரூ.204.30 கோடி வருமானமாக கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ.63.89 கோடி குறைவு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவண பாயசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும், அப்பம் உள்ளிட்ட மற்ற பிரசாத விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடி கிடைத்துள்ளதாகவும், கடந்த 39 நாட்களில் 31,43,163 பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.