அலெக்ஸி நவல்னி உடலை நாங்களே அடக்கம் செய்து விடுவோம்.. குடும்பத்தினருக்கு.. ரஷ்யா கெடு!

Su.tha Arivalagan
Feb 24, 2024,11:09 AM IST

மாஸ்கோ: அமைதியான முறையில் அலெக்ஸி நவல்னி உடல் அடக்கத்திற்கு குடும்பத்தினர் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாங்களே சிறை வளாகத்திற்குள் உடலை நல்லடக்கம் செய்ய நேரிடும் என்று நவல்னியின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அலெக்ஸி நவல்னி. கைது செய்யப்பட்டு ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.  கடந்த சனிக்கிழமையன்று அவர் சிறை வளாகத்திற்குள் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார். அவருக்கு இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்ததாக கூறப்படுகிறது.




இந்த மரணம் ரஷ்யாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளும் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்டன. அதிபர் புடின்தான் இந்த மரணத்திற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் தற்போது அவரது உடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக கெடுபிடி காட்டி வருகிறது ரஷ்ய அரசு.  அவரது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்து பின்னர் அடக்கம் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு ரஷ்ய அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.  இந்த நிலையில் தற்போது அலெக்ஸியின் தாயாரை அழைத்து ஒரு கெடு விதித்துள்ளனர் ரஷ்ய அதிகாரிகள். உங்களுக்கு 3 மணி நேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் அமைதியான நல்லடக்கத்திற்கு ஒத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நாங்களே சிறை வளாகத்திற்குள் உடலை அடக்கம் செய்து விடுவோம் என்று மிரட்டலாக கூறியுள்ளனராம்.


இந்தத் தகவலை  நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தக் கெடுவை ஏற்க நவல்னியின் தாயார் லூட்மிலா நவல்னயா மறுத்து விட்டாராம். எனது மகன் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும் என்று அவர் ஆவேசமாக கேட்டுள்ளாராம்.


நவல்னிக்கு மக்கள் ஆதரவு மிகப் பெரிய அளவில் உள்ளது. அவரது உடல் அடக்கத்தை பொதுமக்கள் அஞ்சலியுடன் நடத்தினால் நாட்டில் மிகப் பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக புடின் நிர்வாகம் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் பொதுமக்கள் அஞ்சலிக்கு நவல்னியின் உடலைத் தர அரசு மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது.


நவல்னியின் மரணம் குறித்து இதுவரை அதிபர் புடின் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.