யாருக்கு பிடிக்குதோ இல்லையோ.. இந்தியா ஒரு இந்துராஷ்டிரம்..  ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்!

Su.tha Arivalagan
Sep 02, 2023,01:17 PM IST
மும்பை: இந்தியாவை பாரத் என்றுதான் அழைக்க வேண்டும். யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இந்தியா ஒரு இந்துராஷ்டிரம் ஆகும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

குவஹாத்தியில் நடந்த ஜெயின் சமாஜ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகன் பகவத் பேசினார். அப்போது அவர் பேசுகையில், நமது நாட்டின் பெயர் பல காலமாகவே, காலம் காலமாகவே பாரத்தான். இடையில்தான் அது சிலரால் மாறி விட்டது. மொழி எப்படி இருந்தாலும் அர்த்தம் ஒன்றுதான், பெயர் ஒன்றுதான். பாரத் என்றே இந்தியாவை அழைக்க வேண்டும்.



இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். பாரத் என்று அனைத்து இடங்களிலும் அழைக்க வேண்டும். அப்போதுதான் எல்லாமே மாறும். நமது நாட்டை பாரத் என்றுதான் அழைக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

இந்தியா அனைவரையும் இணைக்கும் நாடாகும். உலகம் இன்று நம்மை எதிர்நோக்கி இருக்கிறது. நாம் இல்லாமல் உலகத்தால் இயங்க முடியாது.  யோகாசனம் மூலம் நாம் உலகை இணைத்துள்ளோம் என்றார் அவர்.

எதிர்க்கட்சிகள் இணைத்துள்ள மகா கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்போது முதலே இந்தியா என்ற பெயரைத் தவிர்த்து விட்டு பாரத் என்று ஆர் எஸ்எஸ் அமைப்பினரும், சங் பரிவார் அமைப்புகளும், பாஜகவும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.