கட்டுக்கட்டாக பணம்.. மொத்தம் ரூ. 4 கோடி.. நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பபட்டதாக பரபரப்பு!

Su.tha Arivalagan
Apr 07, 2024,05:28 PM IST

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து ரூ. 4 கோடி அளவிலான பணக்கட்டுகள் சிக்கியதால்  அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.


இந்த பணமானது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வழக்கம்போல் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றது. அப்போது அந்த ரயிலில் பணம் கட்டு கட்டாக கொண்டு செல்லப்படுவதாக மாவட்ட தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிட்டனர். அப்போது மூன்று பயணிகள் குறித்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை இட்டபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.




உடனடியாக அவர்களை பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்த போது அவர்கள் கையில் கிட்டத்தட்ட 4 கோடி அளவுக்கு பணக்கட்டுகள் இருந்தது தெரியவந்தது.. மெஷின் வைத்து இந்தப் பணத்தை எண்ணினர். கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் காவல் நிலையமே பரபரப்பானது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அவர்களில் ஒருவரது பெயர் சதீஷ்.  இவர் பாஜகவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மேலாளராக இவர் இருக்கிறார். இவரிடமிருந்து பாஜக உறுப்பினர் அட்டை கிடைத்துள்ளது. இன்னொருவர் பெயர் நவீன், இவர் சதீஷின் சகோதரர் அவர். மூன்றாவது நபர் லாரி ஓட்டுனர் பெருமாள். சதீஷ் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு இவர் காய்கறிகளைக் கொண்டு வாரிலியின் டிரைவராக இருக்கிறார்.


இவர்களிடம் நடத்தி விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மிகப் பெரிய அளவிலான பணம் கிடைத்துள்ளதை தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்பாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.




பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் அது பாஜக வேட்பாளருக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிடிபட்டவர்கள் கூறிய வாக்குமூலத்தாலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2019 தேர்தலில் இதே போல வேலூர் தொகுதியில் மிகப்பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.



அரசுக் கருவூலத்தில் பணம்


பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி பணமும் தற்போது அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரிக்கவுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி என மேலும் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.