மிக்ஜாம் புயல் நிவாரணம்.. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும்.. விரைவில் ரூ.6000 நிவாரணம்..!

Meenakshi
Feb 08, 2024,11:20 AM IST

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு, ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தோருக்கும் விரைவில் ரூ.6000 வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது.


மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்தது.




குறிப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரணப் பணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூபாய் 6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டு வந்தது.


ரேஷன் கார்டு வைத்திருந்தோருக்கு நிவாரணத் தொகை அளித்து முடித்து விட்டநிலையில் தற்போது அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு இல்லாதோர், வருமான வரி கட்டுவோர் உள்ளிட்டோருக்கு வழங்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பித்தோர் கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.  விரைவில் இவர்களுக்கும் ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.