ரூ. 1,297 கோடி பணம், தங்கம், வெள்ளி...தமிழ்நாட்டில் இதுவரை சிக்கியவை.. லிஸ்ட் போட்ட தேர்தல் அதிகாரி

Meenakshi
Apr 17, 2024,06:45 PM IST

சென்னை: தமிழ் நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.1297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காகவே பறக்கும் படையை அமைத்தது தேர்தல் ஆணையம். 


இந்த படை தற்பொழுது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் மட்டுமே மிக அமைதியாக தேர்தல் நடக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை வரை தபால் வாக்கு செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு அளிக்கலாம். 


தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது.ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 65 சதவீத வாக்குச்சாவடிகள் என்ற அளவில் வெப் கேமரா பொருத்தப்படுகிறது. வாக்காளர்கள் அடையாள அட்டை எண் மூலம் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.வாக்குச்சாவடி விவரங்களை அறிய இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம் என தெரிவித்துள்ளார்.