ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றினால் இவ்வளவு செலவாகுமா?

Aadmika
Jan 21, 2024,11:46 AM IST

டில்லி : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றினால் மத்திய தேர்தல் கமிஷனுக்கு எத்தனை கோடிகள் செலவாகும் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்தல் கமிஷன் விளக்கமாக தெரிவித்துள்ளது.


லோக்சபா தேர்தல், மாநில சட்டசபை தேர்தல்கள், இடைத் தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள் என தனித்தனியாக நடத்துவதால் தேர்தல் கமிஷனுக்கு அதிகம் செலவாகிறது. இதனால் லோக்சபா தேர்தலுடன் சேர்த்தே மாநில சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டும். இதனால் பல கோடி ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது.  


ஆனால் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல்களையும் நடத்தினால் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு மட்டும் தேர்தல் கமிஷனுக்கு ரூ.10,000 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.




தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள கணக்கீட்டின் படி, இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் மொத்தமாக 11.8 லட்சம் ஓட்டுச்சாவடிகளில் நடத்தப்பட உள்ளது. இதோடு மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்தினால் லோக்சபா தேர்தலுக்கு ஒன்று, சட்டசபை தொகுதி தேர்தலுக்காக ஒன்று என இரண்டு தனித்தனியான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க வேண்டும். 


முந்தைய தேர்தல் அனுபவங்களின் படி, கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வாக்காளர் ஓட்டு சரிபார்க்கும் இயந்திரம் என பல நிலையான மிஷின்கள் தேவைப்படும். 2023ம் ஆண்டின் துவக்கதிலேயே இந்த அனைத்து மிஷின்களின் விலைகளும் ரூ.8000 முதல் 16,000 வரை உயர்த்தப்பட்டு விட்டது. 


சட்ட அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் தேர்தல் கமிஷன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கே இவ்வளவு செலவு என்றால், இது தவிர கூடுதல் ஓட்டுச்சாவடிகள் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது தவிர பாதுகாப்பு பணியாளர்கள், ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கான வாகன செலவு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வைக்கும் இடத்திற்கான செலவு ஆகியவை கூடுதல் செலவாகவே அமையும். 


இவற்றை கருத்தில் கொண்டே 2024ல் நடக்கும் தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறை படுத்தாமல் வைத்துள்ளோம். 2029ம் ஆண்டில் இதற்கான வசதிகளை அதிகரித்த பிறகு ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் மாநில தேர்தலை நடத்துவதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் 5 பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.