"உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது".. பெண்களை மகிழ்வித்த மெசேஜ்!
சென்னை: திமுக அரசின் முத்திரைத் திட்டமாக பார்க்கப்படும் கலைஞர் பெண்கள் உரிமைத் தொகைத் திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடி பெண்களுக்கு ரூ. 1000 பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வங்கி எஸ்எம்எஸ்கள் வந்து சம்பந்தப்பட்ட பெண்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ. 1000 என்பது மிக மிக சாதாரண தொகையே.. ஆனால் தமிழ்நாடு அரசு அளித்துள்ள இந்த ரூ. 1000 உரிமைத் தொகையானது மிக மிக பெரியது என்பதில் சந்தேகம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு கோடிக் குடும்பங்களை தமிழ்நாடு அரசு தனது பாதுகாப்பு கரத்திற்குள் கொண்டு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு கோடி குடும்பங்களுக்கு ஒரு சகோதரனாக, ஒரு குடும்பத் தலைவனாக, ஒரு தந்தையாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுகவினர் பெருமையுடன் கூறுகின்றனர். சின்னச் சின்னச் செலவுகளுக்காக கூட கணவர் கையை எதிர்பார்க்கும் நிலையில்தான் இன்று பெரும்பாலான பெண்கள் உள்ளனர். கணவரின் குடிப் பழக்கம், நிலையில்லாத வேலை, சரியில்லாத வருமானம் என்று சிரமப்படும் பல இல்லத்தரசிகளுக்கு இந்த மாதம் ரூ. 1000 உரிமைத் தொகைத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.
காய்கறி, அரிசி, வீட்டுக்குத் தேவையான பொருட்கள், தங்களுக்குத் தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கு ஒரு ஸ்னாக்ஸ், பேனா, நோட்டு, பென்சில் போன்ற பொருட்கள் என.. சின்னச் சின்னத் தேவைகளை பூர்த்தி செய்ய நிச்சயம் இந்த 1000 ரூபாய் கை கொடுக்கும். அந்த வகையில் இந்த 1000 ரூபாய் மிகப் பெரிய சந்தோஷத்தையும், வரவேற்பையும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
உருவத்தில் சிறிதாக இருந்தாலம், இந்த ஆயிரம் ரூபாய் என்பது பெரும்பாலான பெண்களுக்கு மிக மிகப் பெரிய தொகை என்பதால் திமுக அரசுக்கு இந்த திட்டம் மிகப் பெரிய பெயரை வாங்கித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தத் திட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் நேற்று காலை முதலே பயனாளிகளுக்கு பணத்தைப் போட ஆரம்பித்து விட்டனர் அதிகாரிகள். இதுதொடர்பான எஸ்எம்எஸ் மெசேஜ்களும் வந்து பயனாளிகளை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளன. பல்வேறு பெண்கள் தங்களது வீட்டு வாசலில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கோலமும் போட்டு தங்களது நன்றியை வெளிப்படுத்தியதையும் காண முடிந்தது.
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள திமுக அரசுக்கு மகுடமாக இந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமைந்துள்ளது.