Encounter: கொலை உள்பட 13 வழக்குகள்.. பிரபல ரவுடி ரோகித் ராஜனுக்கு ஷாக் கொடுத்த சென்னை போலீஸ்!

Manjula Devi
Aug 13, 2024,06:30 PM IST

சென்னை:   பிரபல ரவுடி ரோகித் ராஜன்  போலீஸ் காவலிலிருந்து தப்பிக்க முயன்ற போது அவரை என்கவுண்டர் செய்து பிடித்துள்ளனர் சென்னை போலீஸார்.


சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரோகித் ராஜன். இவர் மீது ஏற்கனவே ரவுடி சிவக்குமார் கொலை வழக்குகள், அடிதடி மிரட்டல் என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  ரவுடி ரோகித் ராஜன் தேனியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது‌. இந்த தகவலின் அடிப்படையில் தேனியில் பதுங்கி இருந்த ரவுடி ரோகித் ராஜன் தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.




இதனை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் ரவுடியை அழைத்து வந்த தனிப்படை அதிகாரிகள் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ரவுடி ரோகித் ராஜன் ஆயுதங்களை எங்கு பதுக்கி வைத்திருந்தார் என்பதை பற்றி அறிய காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது கீழ்பாக்கம் அரசு கல்லறை தோட்டம் அருகே சென்றபோது பிரதீப்  மற்றும் சரவணகுமார் ஆகிய இரண்டு காவலர்களை தாக்கிவிட்டு ரவுடி ரோகித் ராஜன் தப்பிக்க முயன்றார். 


இதையடுத்து ரவுடி ரோகித் ராஜனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் போலீஸார். போலீஸார் சுட்டதில், ரவுடிக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே போலீசார்  ரோகித் ராஜனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் ரவுடி தாக்கியதில் காயமடைந்த இரண்டு காவலர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னை நகருக்குள்  தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டுப் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை விசாரணைக்காக அழைத்துச் சென்ற இடத்தில் அவர் போலீஸாரைத் தாக்க முயன்று அவர் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்