ரவுடிகளுக்கு எந்த லாங்குவேஜ் புரியுமோ.. அந்த பாஷையில் பேசுவோம்.. சென்னை போலீஸ் கமிஷனர் அருண்
சென்னை: சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் தரப்படும். ரவுடிகளை ஒடுக்குவோம். அவர்களுக்கு எந்த லாங்குவேஜ் புரியுமோ அந்த மொழியில் புரிய வைப்போம். முதல்வருக்கு நல்ல பெயர் பெற்றுத் தர பாடுபடுவேன் என்று சென்னை மாநகரின் புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஏ. அருண் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை பெரும் பரபரப்பையும், பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இன்று பிற்பகல் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய கமிஷனர் ஏ.அருண். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காவல்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தங்களது பொறுப்பை சரியாக செய்தாலே எல்லாக் குற்றங்களும் குறையும்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து இப்போது கருத்து கூற முடியாது. இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றங்களைத் தடுப்போம், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்போம்.
ரவுடிகளை ஒடுக்க வேண்டும். அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லிக் கொடுக்கணும். சென்னையில் போக்குவரத்து சிக்கல்கள் இருக்கின்றன. அதையும் சரி செய்வோம்.
என்கவுண்டர் என்பதெல்லாம் கிடையாது. ரவுடிகளுக்கு எந்த லாங்குவேஜ் புரியுமோ அந்த லாங்குவேஜில் புரிய வைத்தால் போதும். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்போம் என்று கமிஷனர் அருண் தெரிவித்தார்.