43 வயதில்.. ஆடவர் இரட்டையர் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்று.. ரோஹன் போபண்ணா அதிரடி!

Su.tha Arivalagan
Jan 27, 2024,06:39 PM IST

மெல்போர்ன்: 43 வயதில் தனது முதலாவது ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் ரோஹன் போபண்ணா. அவரும் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ எப்டனும் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகி அசத்தியுள்ளனர்.


இந்திய - ஆஸ்திரேலிய ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெல்லி - ஆண்ட்ரியா வாவசோரி இணையை 7 (7) -6, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.




ரோஹன் போபண்ணாவுக்கு இதுதான் முதல் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதுவும் 43 வயதில் இந்தப் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அதிக வயது கொண்ட முதல் நிலை வீரராகவும் தற்போது அவர் இருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷமாகும்.


இந்தத் தொடர் முழுவதுமே போபண்ணா - மாத்யூ ஜோடி அபாரமாக ஆடி வந்தது. இறுதிப் போட்டியிலும் அவர்களது அதிரடி தொடர்ந்தது. போட்டிக்குப் பின்னர் ரோஹன் போபண்ணா கூறுகையில், மாத்யூவுக்கு நன்றி. 43 வயதில் இந்த சாதனை நடந்திருக்கிறது. அருமையான ஜோடி எனக்குக் கிடைத்ததால் இது சாத்தியமானது.  எனது முதல் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.


டென்னிஸ் அருமையான ஆசிரியர். எனது இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. எனது பிசியோ ரிபெக்காவுக்கு ஸ்பெஷல் நன்றிகள். அவர்தான் என்னை பிட்டாக வைத்திருக்க உதவியுள்ளார். நிற்காமல் ஓட வைப்பவர் அவரே.


எனது மாமானார், மாமியார் இங்கே இருக்கிறார்கள். இரட்டையர் பட்டத்தை நான் கடந்த முறை வென்றபோதும் அவர்கள் இங்கே இருந்தனர். அவர்கள் அடிக்கடி வந்தால் நன்றாக இருக்கும்.  எனது மனைவி சுப்ரியா, மகள் திரிதாவுக்கும் நன்றி என்றார் ரோஹன் போபண்ணா.