ஆடவர் இரட்டையர் டென்னிஸ்.. உலகின் மிகவும் வயது முதிர்ந்த நம்பர் 1 வீரர்.. யார் தெரியுமா?
சிட்னி: உலகின் மிகவும் வயதான நம்பர் 1 ஆடவர் கலப்பு இரட்டையர் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோஹன் போபண்ணா பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ரோஹன் போபண்ணா, நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்துடன் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
போபண்ணாவுடன் இணையாக ஆடுபவர் மேத்யூ எப்டன். இவர் உலகின் 2வது நிலை வீரராக அரை இறுதிப் போட்டியில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் அதிக வயது கொண்ட முதல் நிலை வீரர் என்ற பெருமை ரோஹன் போபண்ணாவுக்குக் கிடைத்துள்ளது. தற்போது ரோஹன் போபண்ணாவுக்கு 43 வயதாகிறது. தற்போது விளையாடும் வீரர்களிலேயே அவர்தான் அதிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2023 அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியிலும் ரோஹன் போபண்ணா, மிகவும் வயது முதிர்ந்த நம்பர் ஒன் வீரராக களம் கண்டிருந்தார் என்பது நினைவு இருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் விளையாடி வருகிறார் போபண்ணா. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் நுழைந்தபோது, நம்பர் 3 வீரராக அவர் இருந்தார். அரை இறுதிப் போட்டிக்கு அவர் முதல் நிலை வீரராக முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இதுவரை 17 முறை விளையாடியுள்ள ரோஹன் போபண்ணா, இப்போதுதான் முதல்முறையாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக கால் இறுதிப் போட்டியில் போபன்னா ஜோடி தங்களை எதிர்த்து மோதிய அர்ஜென்டினா நாட்டு ஜோடியான மேக்சிமோ கோன்சலஸ் - ஆண்டிரஸ் மால்டனி ஜோடியை ஒரு மணி நேரம் 46 நிமிடங்களில் நடந்த போட்டியில், தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. அர்ஜென்டினா ஜோடியை 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் போபண்ணா -மாத்யூ ஜோடி வென்றது.
அரை இறுதிப் போட்டியில் தாமஸ் மச்சாக் - ஜீசன் ஜாங் சீசன் ஜான் ஜோடியை எதிர்த்து போபண்ணா ஜோடி விளையாடவுள்ளது.