அசத்தும் ஒடிஷா.. சாலை விபத்து இங்கெல்லாம் ரொம்ப கம்மியாம்!

Su.tha Arivalagan
Aug 25, 2023,01:41 PM IST
கட்டாக்: ஒடிஷா மாநிலத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாம். 2023ம் ஆண்டின் 2வது காலாண்டுப் பகுதியில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நெகட்டிவ் டிரெண்டில் இருந்ததாம்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட மிகக் குறைந்த அளவிலான விபத்துக்களே இந்த காலாண்டில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 7.56 சதவீத அளவுக்கு விபத்துக்கள் குறைந்துள்ளனவாம். அதேபோல விபத்தால் ஏற்படும் மரணங்களும் கூட 6.24 சதவீதம் குறைந்துள்ளதாம்.



கடந்த ஆண்டு 2வது காலாண்டில் ஒடிஷாவில் 3134 விபத்துக்கள் பதிவாகின. அதில் 1490 பேர் உயிரிழந்திருந்தனர். அதுவே இந்த காலாண்டில் 2897 விபத்துக்களே நடந்துள்ளன. உயிரிழந்தோரும் கூட 1397 பேர்தான். 

விபத்தினால் ஏற்படும் காயங்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 2871 பேர் காயமடைந்திருந்தனர். இந்த ஆண்டு அது 2572 பேராக இருந்தது. ஒடிஷா மாநில காவல்துறையும், போக்குவரத்துத் துறையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு, விபத்து தடுப்பு, தவிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதையே இது காட்டுகிறது.

விதி மீறல்களைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் ஆலோசனை சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கூட நடத்தப்படுகின்றன. மேலும் சாலை விதிகளை மதித்து நடக்குமாறு பள்ளி அளவிலேயே பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்னர. ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் சாலை விபத்துக்களை ஒடிஷா மாநிலம் குறைத்திருப்பது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது