தமிழ்நாடு முழுவதும்.. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கலெக்டர்கள் வெளியிட்டனர்
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஆண்டு நவம்பர் 16, 17 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதற்காக 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
அதேபோல் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர் நீக்குதல் என பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரி செய்யும் பணியை நடைபெற்று வந்தது. இந்தப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் தயாரானது.
இந்த திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது.
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 6.36 கோடி
பெண் வாக்காளர்கள் - 3.24 கோடி
ஆண் வாக்காளர்கள் - 3.11 கோடி
3ம் பாலின வாக்காளர்கள் - 9120
அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி - சோழிங்கநல்லூர்
குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி- கீழ் வேளூர்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்