15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
டெல்லி: வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 15 (14.20kg) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் சமையல் சிலிண்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு அல்லது இரண்டு இணைப்புகளின் மூலம் சமையல் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இரண்டு சிலிண்டர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது ஒரு சமையல் சிலிண்டர் காலியானால், காலியான சிலிண்டரை கொடுத்த பிறகு தான் இரண்டாவது சிலிண்டரை பதிவு செய்ய முடியும். அதே சமயத்தில் நிறைய பேர் ஒரு இணைப்புகளை மட்டுமே பெற்று பயன்பெற்று வருகின்றனர். இதில் மத்திய அரசு வருடத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்குகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனம் திடீரென வீட்டு உபயோக சிலிண்டருக்கு கட்டுப்பாடு விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒரு வீட்டில் ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்த பின், கூடுதல் சிலிண்டர்களை பெறலாம். 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.