கிச்சனுக்குள் பாய்ந்த டிரம்ப்.. வெளியே வந்தா கையில் பிரெஞ்ச் பிரைஸ்.. அட அவரே குக் பண்ணியதாம்

Su.tha Arivalagan
Oct 21, 2024,05:57 PM IST

பிலடெல்பியா:   அமெரிக்காவிலும் நம்ம ஊர் ஸ்டைலில் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்துக் கொடுத்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஓட்டு வேட்டையாடியுள்ளார்.


இந்தியாவில் தேர்தல் வந்து விட்டால் போதும் நம்ம சின்ராசுக்களை கையில் பிடிக்க முடியாது. நடையாய் நடப்பார்கள்.. ஓடாய்த் தேய்வார்கள்.. டீக்கடைக்குள் புகுந்து டீ போட்டுக் கொடுப்பார்கள்.. தோசை சுடுவார்கள்.. சப்பாத்தி போடுவார்கள்.. மன்சூர் அலிகான் எல்லாம் வேற மாதிரி மாறினார்.. மீன் விற்றார்.. காய்கறி விற்றார்.. ஆந்திரா பக்கம் வேற லெவலுக்குப் போனார் ஒரு வேட்பாளர்.. ஆய் போன குழந்தையைப் பார்த்த அவர் பாய்ந்து போய் தானே வாங்கி அந்த பாப்பாவுக்கு கால் கழுவி விட்டு கதி கலக்கினார்!




இப்போது அமெரிக்காவிலும் இந்த ஸ்டைல் பிரச்சாரம் பரவியுள்ளது. அதாவது சமைத்துத் தரும் பிரச்சாரத்தில் அங்கும் குதித்துள்ளனர். இதை ஆரம்பித்து வைத்திருப்பவர் நம்ம டிரம்ப்தான். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரத்தின்போது தான் 1983ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்தபோது மெக்டொனால்ட்ஸில் சில காலம் வேலை பார்த்ததாக கூறியிருந்தார்.


விடுவாரா டிரம்ப்..  பிலடெல்பியாவுக்குப் போயிருந்த இடத்தில் டக்கென ஒரு மெக்டொனால்ட்ஸ் கடைக்குள் புகுந்து அங்கு பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்துக் கொடுத்து.. எப்பூடி என்று அசத்தி விட்டார். அத்தோடு நில்லாமல் கமலா ஹாரிஸையும் கலாய்த்துத் தள்ளி விட்டார். நிச்சயம் அவர் இதுபோல செய்திருக்க முடியாது. இது கடினமான வேலை. இதையெல்லாம் என்னால் செய்து காட்ட முடியும் என்றும் கூறியுள்ளார் டிரம்ப்.


முன்னதாக தனது பிரச்சாரத்தின்போது கமலா ஹாரிஸ் பேசும்போது, நான் கோடைகாலத்தில் மெக்டொனால்ட்ஸில் பணியாற்றினேன். அப்போது நான் மாணவி. பிரெஞ்ச் பிரை முதல் ஐஸ் கிரீம் தயாரிப்பு வரை செய்துள்ளேன். எனக்கு தொழிலாளர்களின் நிலை குறித்து தெரியும் என்று தெரிவித்திருந்தார்.


நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. டிரம்ப்பும், கமலா ஹாரிஸும் அனல் பறக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்