"கொடியேத்தியாச்சா.. இந்தா பிடிங்க கடலை மிட்டாய்".. அடடே.. அசத்திய தேவகோட்டை பள்ளி!

Su.tha Arivalagan
Jan 26, 2024,12:56 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் இன்று  நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்த பின்னர் மாணவர்களுக்கு வழக்கமாக தரும் மிட்டாய்களுக்குப் பதில் கடலை மிட்டாய் கொடுத்து அசத்தினர் ஆசிரியர்கள்.


சுதந்திர தினம், குடியரசு தினத்தின்போது பள்ளிக்கூடங்களில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். இந்த சமயத்தில் தேசியக் கொடியேற்றும் வைபவத்திற்குப் பிறகு மாணவர்களுக்கு சாக்லேட், பல்லி மிட்டாய் உள்ளிட்டவை வழங்கப்படும். இவையெல்லாம் உடம்புக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிரம்பியவை.




எனவே சாக்லேட் போன்றவற்றுக்குப் பதில் மாணவர்களுக்கு கடலை மிட்டாய் கொடுத்து அசத்தி வருகிறது சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி நிர்வாகம். கடந்த சில வருடங்களாகவே இந்த நல்ல பழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.




இன்று நடந்த  குடியரசு தின விழாவில்  ஆசிரியர் ஸ்ரீதர்  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை முத்துமீனாள்  கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு

வழங்கப்பட்டது.




இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும்  சாக்லேட் தவிர்த்து கடலை, அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி மாணவ, மாணவியர் விஜய்கண்ணன், சபரிவர்ஷன், நந்தனா, ரித்திகா, தீபா, தவதுர்கா, ஹரிப்ரியா, லெட்சுமி ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.