புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த..பிரபல கராத்தே பயிற்சியாளர் ஹுசைனி காலமானார்..!
சென்னை: புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி இன்று காலமானார். இவர் இறப்பு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் பிறந்த பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனிக்கு சிறுவயதிலிருந்தே வில்வித்தை மற்றும் கராத்தே மீது ஆர்வம் அதிகரித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்காப்பு கலையில் சிறந்து விளங்கினார். அத்துடன் சினிமா மீது ஆர்வம் கொண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் திரைப்படத்தில் அறிமுகமானார்.
சினிமாக்களில் தற்காப்பு பயிற்சி கற்றுக் கொடுக்கும் பணிகளையும் செய்து வந்தார். அதன் அடிப்படையில் விஜய் நடிப்பில் உருவான பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் போன்று நடித்திருந்தார். அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.
60 வயதான பிரபல கராத்தே பயிற்சியாளர் ஹுசைனி லுகேமியா என்னும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சமீபகாலமாகவே சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு ரத்த புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மனம் தளரவில்லை. மரணத்திற்கு பயப்படவில்லை.அதனை எதிர்கொள்வேன் என வீடியோ வெளியிட்டிருந்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதனால் கராத்தே மாஸ்டர் ஹுசைனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரும் நேரில் சென்று ஆறுதல் அளித்து உதவி செய்து வந்தனர். அதே சமயத்தில் ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹுசைனி சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.