மத்தியில் பிராந்தியக் கட்சிகள் ஆட்சி அமைக்கும்.. பாஜக, காங். ஆதரவு தரும்.. கே.சி.ஆர். புது குண்டு!

Su.tha Arivalagan
May 11, 2024,05:09 PM IST

டெல்லி: மத்தியில் பிராந்தியக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும். அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி ஆதரவு தரும் என்று பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், முன்னாள் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.


தனி தெலங்கானா மாநிலம் உருவாவதற்காக தீவிரமாக போராடியவர் கே.சி.ஆர். தெலங்கானா மாநிலம் அமைந்த பிறகு தொடர்ந்து பத்து வருட காலம் அவர் முதல்வராக இருந்தார். சமீபத்தில் நடந்த தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.


கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் ஒத்து வரவில்லை. மறுபக்கம் அமலாக்கத்துறையின் பிடியில் அவரது மகள் கவிதாவும் சிக்கிக் கொள்ளவே அப்படியே முடங்கிப்போனார் கேசிஆர். இந்த நிலையில் லோக்சபா நடந்து வரும் நிலையில் ஒரு புதிய தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.


என்டிடிவிக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: 




நான் ஒன்னு சொல்றேன்.. அதை நீங்க நம்ப மாட்டீங்க. இந்த முறை மத்தியில் புதிய விஷயம் நடக்கப் போகிறது. அனைத்து பிராந்தியக் கட்சிகளும் தற்போது வலுவாக உள்ளன. அவை ஒரு சக்தியாக மாறப் போகின்றன. முன்பெல்லாம் பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது இந்தியா கூட்டணியோ ஆட்சியமைக்கும். இப்போது அப்படி நடக்காது. பிராந்தியக் கட்சிகள்தான் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகின்றன. அவற்றுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது இந்தியா கூட்டணியோ ஆதரவு தரப் போகின்றன. இதுதான் நடக்கும். நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் அவர்.


கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் 9ல் பிஆர்எஸ் கட்சி வென்றது. ஆனால்  கடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. எனவே வரும் லோக்சபா தேர்தலில் பிஆர்எஸ் கட்சிக்கு பலத்த அடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் கட்சி மீது தெலங்கானா மாநிலத்தில் பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதால் அக்கட்சியே அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் அதை கேசிஆர் நிராகரித்துள்ளார். கடந்த ஆறு மாத கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் வேதனையைத்தான் சந்தித்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பதை மட்டுமே செய்துள்ளனர். அதுவும் சொதப்பலாகத்தான் இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் அதிருப்தியில்தான் உள்ளனர் என்றார் அவர்.