அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து.. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொன்ன பதில்
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் நன்மைக்கே என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023இல் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. அப்போது இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் பாஜகவோடு தான் அதிமுக மீண்டும் கூட்டணியில் சேரும் என்று ஒருசாரர் தெரிவித்து வந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இது குறித்தி மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். கல்வி நிதி, இரு மொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பேசியுள்ளோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எப்பாடி பழனிச்சாமி சந்திப்பினால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் சேரும் என்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் "எல்லாம் நன்மைக்கே" என்று ஒன்றை வரியில் பதில் கூறி சென்றார்.