சென்னைக்கு ரெட் அலர்ட்.. வேறு யாருக்கெல்லாம் எச்சரிக்கை கொடுத்திருக்காங்க.. முழு விவரம்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் இன்று அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருவதால், இந்த 4 மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு, கத்திபாரா, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, பள்ளிக்கரணை, அண்ணாநகர், கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை என பல இடங்களில் மழை காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்கில் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. மழையினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
யார் யாருக்கு அலர்ட்?
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்றுடன் சேர்ந்து நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்