பிரதமர் உரையின் போது எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததற்கு இது தான் காரணமா?

Aadmika
Aug 11, 2023,09:45 AM IST
டெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

பதில் கேட்ட எதிர்க்கட்சிகள் ஏன் வெளியேற வேண்டும் என அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மணிப்பூரில் தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வரும் வன்முறை, இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம் ஆகியவற்றை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் நடப்பு பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை முடக்கி வருகின்றன. இந்த விவகாரத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என பல நாட்களாக கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை சபாநாயகர் ஏற்ற பிறகும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு முன் பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார். ஆனால் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இத்தனை நாட்களாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என பார்லிமென்ட்டை முடக்கி வந்த எதிர்க்கட்சிகள், அவர்கள் கேட்டது படியே பிரதமர் பதிலளிக்கும் போது அதை கேட்காமல் எதற்காக வெளியேறினர் என அனைவருக்கும் அதிர்க்கட்சி கலந்த குழப்பம் ஏற்பட்டது. இதற்கு காங்கிரஸ் எம்பி கெளரவ் கோகாய் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மணிப்பூரில் நடக்கும் இரட்டை ஆட்சி முறையின் தோல்விக்கு பிரதமர் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.

மணிப்பூர் முதல்வரின் ஆட்சியில் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 60,000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சாமானி மக்கள் கூட கைகளில் ஏகே 47 துப்பாக்கி வைத்துள்ளனர். பாதுகாப்பற்ற சூழல் அங்கு நிலவுகிறது. ஆனாலும் பிரதமர், முதல்வரை பதவியில் இருந்த நீக்கவில்லை. அவர் எப்போது மணிப்பூர் செல்ல உள்ளார் என்றும் அவர் கூறவில்லை. இன்று கூட மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வருவதற்கு என்ன செய்ய போகிறார்கள் நிரந்தர தீர்வு காணவில்லை. அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. பிரதமரின் வார்த்தையால் மணிப்பூர் மாநிலமே அதிருப்தியில் உள்ளது. பிரதமரின் வார்த்தை அவர்களுக்கு வேதனை அளித்துள்ளது. அதனால் தான் இ-ந்-தி-யா கூட்டணியினர் அவையில் இருந்து வெளியேறினோம் என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மிக நீண்ட உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதை இறைவனின் ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். மணிப்பூரில் விரைவில் அமைதி மீண்டும் கொண்டு வரப்படும் என்றார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போது, எனது பதிலை கேட்பதற்க கூட அவர்களுக்கு பொறுமை இல்லை என்றார்.

இதற்கிடையே, பிரதமரின் நேற்றைய லோக்சபா பேச்சின்போது மணிப்பூர் குறித்த விரிவான திட்டம் போன்ற எதையும் அறிவிக்காமல் நீண்ட நேரம் வேறு விஷயங்கள் குறித்து மட்டுமே பேசியது, பாஜகவுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும். பிரதமர் மணிப்பூர் குறித்து விரிவாக பேசியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தது போலாயிருக்கும் என்று வலது சாரி ஆதரவாளர்களே கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பேச்சுக்களை நேற்று நடந்த பல்வேறு டிவி விவாதங்களில் கேட்க முடிந்தது.