Real life Story.. இரு மனம் கலந்தது... இருமுறை மணம் (திருமணம்).. கதையல்ல நிஜம்!
- ஸ்வர்ணலட்சுமி
வட நாட்டில் நடந்த உண்மை சம்பவம் இது. இரு வேறு சமூகங்களை சேர்ந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட காதல், ஸ்பரிசம், காதலை அடைய அவர்கள் நடத்திய போராட்டம், வாழ்க்கையில் இணைந்தது ஆகிய சுவாரஸ்யமான விஷயங்கள் தான் இந்த காதல் கதை.
நோபாள இனத்தை சேர்ந்த பெண் மனிஷா, வட மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஆரவ் . மத்திய அரசின் போட்டி தேர்வு எழுத சென்ற இடத்தில் தான் இருவரின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. தேர்வு எழுத சென்ற இடத்தில் ஏதேச்சையாக இருவரும் தேர்வு பற்றி கலந்துரையாடிய போது, இருவரின் மனமும் ஒன்று கலந்தது. முதல் சந்திப்பிலேயே இருவரின் மனதிலும் காதல் பூ பூத்தது. பட்டாம்பூச்சி பறந்தது. இருவரும் நன்றாகவே தேர்வு எழுதி, தேர்வில் வெற்றி பெற்றனர்.
மனிஷாவிற்கு ரயில்வேயிலும், ஆரவிற்கு சுங்கத்துறையிலும் மத்திய அரசு வேலை கிடைத்தது. இருந்தாலும் வேலைக்கான பணி உத்தரவு வர தாமதமானதால் இருவரும் அவரவரின் சொந்த ஊர்களில் இருந்தனர். இந்த இடைவெளியில் காதலை அடுத்த கட்டத்தை கொண்டு சென்று, வாழ்க்கையில் இணைவதற்கான வேலையில் இருவரும் இறங்கினர். தொலைபேசியில் இவர்களின் காதல் படிப்படியாக வளர்ந்தது. பிறகு தங்களின் வீடுகளிலும் காதலை பற்றி தெரியப்படுத்தினர்.
ஆரவின் குடும்பம்,மிடில் கிளாஸ். அப்பா இறந்ததால் தன்னுடைய தாய், தங்கையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இருந்தது. ஆனால் மனிஷா பெரிய செல்வந்தர் வீட்டு பெண். இவர்கள் வீட்டில் வேலை செய்வதற்கு மட்டுமே 5 வேலையாட்கள் அவர்கள் வீட்டில் இருப்பர். ஒரே பெண் என்பதால் தங்க தாம்பூலத்தில் வைத்து அவளை தாங்கும் குடும்பம்.
ஆரவ், தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமலேயே மனிஷா வீட்டிற்கு பெண் கேட்க சென்றான். மனிஷாவின் அப்பா பயங்கர கோபக்காரர் என்பதால் ஆரவின் திடீர் வருகை மனிஷாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆரவை, அப்பா ஏதாவது செய்து விடுவாரோ என்ற மனபோராட்டத்தில், அவள் வேண்டாத தெய்வங்கள் இல்லை. வழக்கமான காதல் கதைகளில் வருவது போல் மனிஷா வீட்டில் முதலில் மறுப்பு, எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் மனிஷாவும், ஆரவும் உறுதியாக இருந்து இறுதி வரை போராடி மனிஷா வீட்டாரின் சம்மதத்தை பெற்றனர். இருந்தாலும் நேபாள முறைப்படி தான் திருமணம் நடைபெற வேண்டும் என மனிஷா குடும்பத்தினர் கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்.
இங்கு ஆரவ் வீட்டில், அவன் தான் குடும்ப பொறுப்பை கவனிக்கும் நிலையில் இருந்ததால் அவரது வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஏதும் சொல்லவில்லை. இருந்தாலும் ஆரவின் அம்மாவும் அவர்களது குடும்ப வழக்கப்படி திருமணம் நடக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதனால் நோபாள முறைப்படி, ஆரவ்வின் குடும்ப வழக்கப்படி என இருவருக்கும், இருமுறை திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் தென்னிந்தியாவில் வேலை கிடைத்து, தனிக்குடித்தனம் வந்தனர்.
இப்போது தான் காதலுக்கு கண், காது, மூக்கு கிடையாது என்ற உண்மை இருவருக்கும் தெரிய வந்தது. மனிஷா முழுக்க முழுக்க அசைவம் சாப்பிடும் பெண். ஆனால் ஆரவ் சுத்த சைவம். மனிஷ் வீட்டில் அரிசியை உணவாக உண்ணும் பழக்கம். ஆரவ் வீட்டில் கோதுமையை பிரதான உணவாக கடைபிடிக்கும் வழக்கம். இருந்தாலும் தன்னுடைய காதல் கணவனுக்காக மனிஷா, தன்னுடைய உணவு பழக்கம், ஆடம்பரமான வாழ்க்கை அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ துவங்கி விட்டாள். எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் இருமனம் கலந்து, இருமுறை மணந்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கின்றனர்.
காதலின் மகத்துவமும் அடிப்படையும் இதுதானே.. ஒருவரை ஒருவர் உளப்பூர்வமாக புரிந்து.. அவர்களுக்கிடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இரு மனங்களும் இணைவதுதான் உண்மையான திருமணம்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்