இதுவரை எவ்வளவு ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது தெரியுமா?
Aug 02, 2023,10:52 AM IST
டெல்லி : இதுவரை எவ்வளவு ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்ற விபரத்தை மத்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
எந்த காரணத்திற்காக ரூ.2000 நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதோ அந்த முயற்சி 88 சதவீதம் வெற்றி அடைந்து விட்டதாகவும் ஆர்பிஐ தரப்பு சொல்கிறது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் பண மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்து வருகிறது. ஏற்கனவே 2018 ம் ஆண்டு ரூ.500, 1000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் கண்டிப்பாக தெரிவித்து விட்டது.
இந்நிலையில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. ஜூலை 31 ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஜூலை 31 வரை 0.42 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 ம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மே 19 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்து குறைந்திருந்தது.