ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை.. பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும்.. ரிசர்வ் வங்கி தகவல்

Su.tha Arivalagan
Jun 07, 2024,06:54 PM IST

டெல்லி: இந்தியாவின் பொருளாதார சூழல் வலுவாக இருப்பதால் 7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அதேசமயம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 6 உறுப்பினர்களைக் கொண்ட கொள்கை வகுப்புக் கமிட்டியில் 4-2 என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்கிகாந்த தாஸ் அறிவித்தார்.  இதை அறிவித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாராம் வலுவான அடித்தளத்துடன் கூடியதாகும். அது வலுவான நிலையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். முன்பு இது 7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.




உலகம், ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டால் அடுத்த நெருக்கடி பின்னாடியே காத்திருக்கிறது. இந்த சூழலுக்கு மத்தியிலும் கூட இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பது ஆரோக்கியமானது, மகிழ்ச்சி தரக் கூடியதாகும். ஸ்திரமான வளர்ச்சியை நாம் காணக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


பணவீக்கத்திற்கு எதிரான நமது போராட்டம் கடுமையானதாகவே இருக்கிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதன் பொருட்டே ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது 6.5 சதவீதமாகவே தொடரும். எட்டாவது முறையாக நாம் மாற்றங்களை செய்யாமல் தவிர்த்துள்ளோம் என்றார் அவர். 


முன்னதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்பார்த்து மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வு கண்டு காணப்பட்டது. அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் உயர்வு காணப்பட்டது.