சட்டசபையில் அதிமுகவுக்கு "வெற்றி".. ஓ.பி.எஸ் சீட்டை.. ஆர்.பி. உதயக்குமாருக்கு ஒதுக்கினார் சபாநாயகர்!
சென்னை: சட்டசபை அதிமுக துணைத் தலைவராக ஆர்.பி. உதயக்குமாரை சபாநாயகர் அப்பாவு இன்று அங்கீகரித்தார். இதையடுத்து முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகே உள்ள சீட்டை ஆர்.பி. உதயக்குமாருக்கு சபாநாயகர் ஒதுக்கியுள்ளார்.
இதுவரை எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகே அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது 2வது வரிசைக்கு மாற்றப்பட்டு, முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பிளந்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. பிளவுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சட்டசபையில் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஓ பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதையடுத்து அவர் வகித்து வந்த சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி அதாவது சட்டசபை அதிமுக துணைத் தலைவராக ஆர்.பி . உதயக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆர்.பி. உதயக்குமாருக்கு தனக்கு அருகே சீட் ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. ஆனாலும் சபாநாயகர் அதுதொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்து வந்தார். இந்த நிலையில் நேற்றும் எடப்பாடி பழனிச்சாமி இதுதொடர்பாக கோரிக்கை வைத்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, இதுதொடர்பாக சபாநாயகர் ஆவண செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதை ஏற்ற சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதன்படி இன்று ஆர்.பி. உதயக்குமாருக்கு, எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகே சீட் தரப்பட்டது. அந்த இடத்தில் இதுவரை அமர்ந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது தனபாலுக்கு அருகே மாற்றப்பட்டுள்ளார். அதேபோல ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த இன்னொரு சட்டசபை உறுப்பினர் மனோஜ் பாண்டியனின் இருக்கை மாற்றப்பட்டு, அவர் இதற்கு முன்பு ஆர்.பி. உதயக்குமார் அமர்ந்திருந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்ட செந்தில் பாலாஜியின் இருக்கை பின்வரிசைக்கு மாற்றப்பட்டு விட்டது.