இரத்தக்களறி (சிறுகதை)
- கவிஞாயிறு இரா.கலைச்செல்வி
"அம்மாடி... எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. இப்படியா.... செய்வானுங்க. எனக்கு ஐந்தடி தூரத்தில.... நட்ட நடு ரோட்டுல ....கார்ல உட்கார்ந்து இருந்தவரை புடிச்சு இழுத்து.... .ரோடு பூராவும் ....ஒரே இரத்தக்களறியா இருக்கு."
"வந்தவனுங்க..... வந்த வேகத்துல காரில் சிட்டா பறந்துட்டானுங்க. ஐயோ.... சினிமாவுல நடக்குற மாதிரியே இருக்கே."
புலம்பியபடியே பக்கத்தில் உள்ள தெருவுக்கு போய்' ஒரு வீட்டின் வாசற்படியில் அமர்ந்தாள் ரேணுகா.
"அம்மா .....கொஞ்சம் தண்ணி குடுமா... ஒரே....மயக்கமா வருது. இப்படியா பண்ணுவாங்க. படுபாவி பயலுக" .
"என்னம்மா... என்ன ஆச்சு...? "
"ஏன்... கேக்குறீங்க ....போங்க...". கொஞ்சம் பத்தடி தள்ளி... ரோட்ல போய் பாருங்க ....அந்த ரத்தக்களரிய.
அப்போதுதான் அந்த தெருவிற்கே தெரிந்தது . ரோட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.
செய்தி காட்டுத்தீயாய் பரவியது. தெருவெல்லாம் ஒரே பரபரப்பு. . இப்படியா பண்ணுவானுங்க ...!!! பட்ட பகல்ல.... ரோடு எல்லாம் இரத்தம். பார்க்க முடியல .
"என்ன ஆச்சு... என்ன ஆச்சு... " பலரும்.
நம்ம பஞ்சாயத்து தலைவரைத் தான்... வெட்டி போட்டுட்டு ஓடிட்டானுங்க.
"அடக்கடவுளே... இவரையுமா...??? "
அந்த பழைய தலைவர் அம்மாவா... பொம்பளையுனும் கூட பாக்காம... பஞ்சாயத்து ஆபீஸ்லயே... வச்சு வெட்டுனானுங்க. இரண்டாவது தலைவரை... அவர் வீட்டிலேயே வச்சு வெட்டுனானுங்க. இப்போ மூணாவதா இவரையும்.... இப்படி நட்ட நடு ரோட்டில கொலை பண்ணிட்டாங்களா...!!!
"என்னதான் நடக்குது இந்த ஊர்ல...!!! "
எல்லாம் ரியல் எஸ்டேட் தகராறு தான். பஞ்சாயத்து தலைவர் ஆனவுடன்... அதிகாரம் இருக்குதுன்னு ஊர்ல உள்ள ...பொறம்போக்கு நிலத்த எல்லாம் பட்டா போட்டு ... இஷ்டத்துக்கு விக்கிறாங்க. காசு... கொள்ளை காசு வருது. அதுல வர்ற பங்கு தகராறு தான்... வேற என்ன...??
"நம்ம ஊருக்கு .. ரோடு போட கவர்மெண்ட் கொடுக்கிற பணத்தையும் ...பொய் கணக்கு எழுதி .. அங்கே ரோடு போட்டேன் ...இங்கே ரோடு போட்டேன்....ன்னு சொல்லி வாயில போட்டுக்கிறாங்க. "
"தெரிஞ்சவன் சும்மா இருப்பானா....??? எனக்கும் பங்கு வேணும்னு கேட்பான்..!!! குடுக்கலைன்னா வெட்டு."
இவங்களுக்கு கொஞ்சம் கூட ....உயிர பத்தி கவலையே இல்லையே.
முன்னாடி ரெண்டு பேரையும் தான் வெட்டுனாங்களே...!!!. இப்பவாவது கவனமா இருக்கணும்னு நினைச்சாங்களா ..!!!. காசை வைத்து என்னத்த பண்ண போறாங்க...??? இப்போ உயிரே போச்சே...!!!... இப்படி சிலர்.
இனிமே இந்த ஊருல பஞ்சாயத்து தலைவரா யாரும் நிக்கவே மாட்டாங்க..!!! அடுத்தடுத்து மூன்று உயிர் போயிடுச்சே. இது பலரின் அங்கலாய்ப்பு.
இந்த ஊரை நினைச்சாலே பயமா இருக்கு... ஏன் இவனுங்க இப்படி இருக்காங்க ...??.கொலை செய்ற அளவுக்கு..!!! பேசி தீர்க்க முடியாதா..?? ஒன்னும் புரியல .ஒரு கொலையா... ரெண்டு கொலையா ....மூனு கொலை...!!! மூனு பஞ்சாயத்து தலைவர்களையும் வெட்டி சாய்ச்சுட்டாங்களே.. ..!!! புலம்பித் தீர்த்தாள் ரேணுகா.
"பஞ்சாயத்து தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யவா வர்றாங்க .??.சொத்து சேர்க்கிறதுக்கு தான் வர்றாங்க. இப்படி உயிரே போகுது. உயிரை விட சொத்து தான் பெருசா போச்சு. .பதவிக்கு வராங்க.... ஊரெல்லாம் வளைச்சு போடுறாங்க. மத்தவங்களுக்கு பகையாளியா மாறிடுறாங்க... !!! எப்ப தான் இந்த ஊருக்கு நல்ல காலம் வருமோ..? இது ஊர் மக்கள்.
மூன்று பஞ்சாயத்து தலைவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு விட்டநிலையில் இனியாவது... யாராவது உண்மையில் சேவை செய்யும் மனப்பான்மையோடு பஞ்சாயத்து தலைவராக வருவார்களா என்ற ஏக்கம்... அந்த ஊர் மக்களுக்கு.
யாரும் நல்ல மனிதர்கள் தேர்தலில் நிற்பதே இல்லை. கட்சிக்கு எவன் காசு கொடுக்கிறானோ அவனுக்கு சீட்டு. ஓட்டு யாருக்கு போடுறதுன்னே... தெரியல. மூஞ்சியிலயே ரவுடி..ன்னூ எழுதி ஒட்டி இருக்கு .எவனுக்கு ஓட்டு போடுவது. பலரின் ஆதங்கம் இதுதான்.
வீட்டு வரி அவ்வளவு கட்றோம். 15 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ரோடு. குண்டும் குழியுமா இருக்கு. நடக்கவே முடியல..!!! . ரோடு போட சொல்லி எத்தனை தடவை தான் மனு கொடுக்கிறது. ஒரு பிரயோஜனமும் இல்ல...!!!
எதுக்கு வரி கட்டணும்....??? வரி கட்டுவது நம்மளோட கடமை தான்.. அப்ப அவங்க கடமையை அவர்கள் செய்ய வேண்டாம்...!!! ஆத்திரமா வருது...!!! புவனா புலம்பி தீர்த்தாள்.
எலக்க்ஷன் வருதுன்னா மட்டும்... எவ்வளவு ரூபாயை வேஸ்டா செலவழிக்கிறாங்க..!!! மேள தாளம் ...நோட்டீஸ்... விளம்பரம்... கட் டவுட்... மேடைப் பிரச்சாரம். இப்படி எவ்வளவு பணத்தை வாரி இறைக்கிறாங்க...??? அந்தப் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தினா திரும்ப திரும்ப அவனுக்கு தானே ஓட்டு போடுவாங்க...?? இது தெரியாதா..????
இறைவா ....இந்த ஊருக்கு ஒரு நல்ல காலம் பிறக்கணும்...!!! இப்படி ரேணுகாவின் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு வருடம் ஆனது . அடுத்த பஞ்சாயத்து தேர்தல் .இந்த தேர்தலில் கொலை செய்யப்பட்ட தலைவரின் மனைவி கமலா போட்டியிட போவதாக தகவல்.
அனைவருக்கும் ஆச்சரியம் .இத்தனை கொலை நடந்த பிறகும்மா...!!! கணவர் இறந்தும் கூடவா...!!! ஊரைவித்து உலையில போட்டவங்க .இருக்கிற காசு பத்தாதா...??? கட்சிக்கு எத்தனை கோடி கொடுத்தாங்களோ...!!! ஊரே பதறிப்போனது.
தேர்தலுக்கு பத்து நாள் இருக்கின்ற நிலையில்... கமலாம்மா ... வாக்கு சேகரிக்க புறப்பட்டாள்.
கமலாவின் பேத்தி ..."பாட்டி பாட்டி எலக்சன்ல நிக்காதீங்க..தாத்தா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆயிரும். வேண்டாம் நீங்க வீட்டிலேயே இருங்க." புடவையைப் பிடித்துக் கொண்டு ..... பாட்டியை போக விடவில்லை பேத்தி.
கமலாவின் மகன் சீக்கிரம் கிளம்புமா..!!! .அதுக்கு என்ன.? பவித்ரா முதல்ல உள்ளே போ. அதட்டினான்.
12 வயது பவித்ரா போச்சு... போ... எனக் கையை ஆட்டிக்கொண்டே உள்ளே போனாள்.
அம்மா ... வாமா...என அவசரப்படுத்தினான் ...அடுத்து தலைவராய் வலம் வர போகும் கற்பனையில், அவளின் 45 வயது மகன்..
அம்மா.... பேருக்கு தானே தலைவி . அதிகாரம் செலுத்தப் போவது நாம் தானே... என்ற நினைப்பு இவனுக்குள்....!!!
காசு கொடுத்து வரவழைத்திருந்த 20 பெண்கள் புடைசூழ... கமலாவை நடுவில் நிற்க வைத்து ...மேள தாளத்துடன் ...ஓட்டு கேட்க... பயணம் தொடர்ந்தது.
கமலா.... இந்த தடவை நான் வெற்றி பெற்றால்.... இந்த ஊர் மக்களுக்கு, என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து , என் கணவர் செய்த பாவங்களுக்கு ... பிரயாச்சித்தம் செய்தே ஆக வேண்டும் ...!!! என்ற ஒரு திடமான முடிவோடு... பிரச்சார பயணத்திற்கு ... காலடி எடுத்து வைத்தாள்...!!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)