ரூ. 6000 நிவாரணத் தொகை திட்டம்.. வேளச்சேரியில்  நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Dec 16, 2023,05:06 PM IST

சென்னை: மிச்சாங் அல்லது மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 6000 ரூபாய் நிவரணத் தொகை நாளை வழங்கப்பட உள்ளது.


வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெய்த மழையால் சென்னை முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. சென்னை மட்டுமல்லாமல், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்குள்ள மக்கள் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தனர்.


வீட்டிற்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததால் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அங்குள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். ஏராளமானவர்கள் உடமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.




இந்தச் சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ள நிவாரண வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி, மழை வெள்ளத்தில் பாதிப்பு அடைந்தவர்கள் தங்களுடைய விவரங்களுடன் வங்கி கணக்கை என் விவரங்களை தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரூ. 6000 நிவாரணம் தொகை பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்த பட்டியல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. அதன்படி எந்த தேதியில் எந்த நேரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற விவரமும் அந்த டோக்கன்களில் இடம் பெற்று இருந்தது. இந்த டோக்கன் தரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ரூபாய் 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைக்க உள்ளார். 


தமிழகத்தின் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது நான்காவது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதால், நாளை நான்கு மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் விடுமுறை நாளான நாளை இயங்கும் என்றும் உணவு வழங்கல் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.