ஆகஸ்ட் மாத துவரம் பருப்பு, பாமாயில் இன்னும் வாங்கலியா.. நோ டென்ஷன்.. செப். 5 வரை வாங்கிக்கலாம்!

Manjula Devi
Aug 31, 2024,12:12 PM IST

சென்னை:   ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .


தமிழ்நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு மற்றும் எண்ணெயின் விலை கிடு கிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் இந்த பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்களை தலா 30 ரூபாய்க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். 




ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து ரோஷன் கடைகளிலும் பாமாயில், மற்றும் துவரம் பருப்புகள் மாத இறுதியில் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்து வந்தது. அதேபோல் மே மாதம் முதல் இந்த இரண்டு பொருள்களுக்கும் தட்டுப்பாடு நிலவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் காரணமாக இப்பொருள்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. 


இதையடுத்து  மே மாத பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து தட்டுப்பாடு நீடித்து வந்ததால் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் உணவுப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்