Tata Nano.. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை மகிழ்வித்துப் பார்த்த உயர்ந்த மனிதர்.. ரத்தன் டாடா!

Su.tha Arivalagan
Oct 10, 2024,08:44 AM IST

மும்பை: ஆட்டோக்களிலும், டூவீலர்களில் மட்டுமே பயணித்து வந்த இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை நீங்களும் கார் வாங்கலாம், தாராளமாக கார் அனுபவத்தை அனுபவிக்கலாம்.. எல்லோரையும் போல உங்களுக்கும் கார் சொந்தமானது என்ற கவுரவத்தைக் கொடுத்தவர் ரத்தன் டாடா.


கார் என்பது ஒரு காலத்தில் ஆடம்பரமாகவும், அந்தஸ்தாகவும் மட்டுமே பார்க்கப்பட்டது. பணக்காரர்களிடம்தான் கார் இருக்கும், பணம் இருப்பவர்களால் மட்டுமே கார் வாங்க முடியும். கார் வைத்திருந்தால் அவர்கள் பணக்காரர்கள் என்று பார்க்கப்பட்ட காலம் இந்தியாவில் இருந்தது. ஆனால் இந்த எண்ணங்களைத் தகர்த்ததில் இரு நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.. ஒன்று மாருதி, இன்னொன்று டாடா. 


இதில் டாடாவை மிகப் பெரிய முன்னோடி என்று சொல்லலாம். காரணம், நடுத்தர குடும்பங்களுக்கு கார் பெரும் கனவாக இருந்த நிலையில் அதை தகர்த்து, உங்களாலும் கார் வாங்க முடியும், நீங்களும் கார் வாங்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்காகவே டாடா அறிமுகப்படுத்திய கார்தான் டாடா நானோ. இந்தக் கனவுத் திட்டத்தை கொண்டு வந்து இந்தியாவில் கார் துறையில் மிகப் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா.


டாடா நானோ கார்




ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் என்பதையெல்லாம் அப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாது. குறைந்தது 5 லட்சமாவது இருந்தால்தான் கார் வாங்க முடியும் என்ற நிலையில் அதைத் தகர்த்து அதிகபட்சம் ஒன்றரை லட்சம் போதும் என்ற நிலையை ஏற்படுத்தி, அதுவரை ஆட்டோக்களிலும், டூவீலர்களில் நெருக்கி அடித்தும் போய்க் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்து குடும்பங்களை காரில் ஏற்றி அழகு பார்த்தவர் ரத்தன் டாடா.


நானோவின் வருகையின் மூலமாக குட்டிக் கார்கள், விலை மலிவு கார்களுக்கு விதை போட்ட பெருமை ரத்தன் டாடாவையே சேரும். இன்று நடுத்தர வர்க்கத்தினர் எளிமையாக கார் வாங்க முடிகிறது என்றால் அதற்கு ரத்தன் டாடாவும் ஒரு முக்கியக் காரணம். நானோ கார் ஏற்படுத்திய புரட்சி, இந்திய கார் துறையில் மிக முக்கியமான மைல்கல்லாகும்.


செல்லப்பிராணிகளின் மீது அன்பு




ரத்தன் டாடா ரொம்ப சிம்பிளான மனிதர். வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவித்து மகிழ்ந்த ரசனைக்காரர். அவரது தாத்தா ஜாம்ஷெட்ஜி டாடாவிடம் இருந்த பல குணங்கள் ரத்தனிடமும் இருந்தது. மழைக்காலம் வந்து விட்டால் ஜாம்ஷெட்ஜி அந்தப் பகுதியில் உள்ள தெரு நாய்களை தனது வீட்டு வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கச் சொல்வாராம். காரணம் அவை மழையில் நனைந்து கஷ்டப்படுமே என்பதால். அதே பழக்கத்தை ரத்தன் டாடாவும் கடைசி வரை கடைப்பிடித்து வந்தார். ரத்தன் டாடா, டைட்டோ மற்றும் மேக்ஸிமஸ் என்ற இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வந்தார். இதுதவிர தான் வசித்து வந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கும் சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்திருந்தவர். மழைக்காலத்தில் தனது தாத்தாவைப் போலவே, ரத்தனும், தெரு நாய்களை தனது வீட்டு வளாகத்திற்குள் பாதுகாப்பாக தங்க வைப்பாராம்.


1937ம் ஆண்டு பிறந்தவர் ரத்தன் டாடா. பிறந்து பத்து வருடத்தில் அதாவது 1948ம் ஆண்டு இவரது பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவரது பாட்டி நவஜ்பாய் டாட்டாதான், ரத்தனை வளர்த்தார். மும்பையிலும், சிம்லாவிலும் படிப்பை முடித்த ரத்தன் பின்னர் நியூயார்க்கில் உள்ள ரிவர்டேல் கன்ட்ரி பள்ளியிலும் படித்தார். அதன் பிறகு கார்னெல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரத்தன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் நிர்வாகவியல் படிப்பையும் படித்தார். 


டாடா ஸ்டீல் நிறுவனத்தில் தனது பணியை 1961ம் ஆண்டு ரத்தன் தொடங்கினார். அங்கு எல்லா வேலைகளையும் செய்யுக் கற்றுக் கொண்டு எந்த ஈகோவும் பார்க்காமல் செய்வாராம். பெரிய பெரிய பர்னஸ்களில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக் கல்லை அள்ளிப் போடும் வேலையைக் கூட செய்துள்ளாராம். அவருக்கு ஐபிஎம்மில் வேலை பார்க்க அழைப்பு வந்தபோதும் கூட தனது குடும்பத் தொழிலைப் பார்த்துக் கொள்ள அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். 


சர்வதேச பிராண்ட் ஆன டாடா குழுமம்




1991ம் ஆண்டு டாடா குழுமத் தலைவரானார் ரத்தன் டாடா. அதன் பிறகு டாடா குழுமம் சர்வதேச அளவில் பல சாதனைகளையும், முத்திரைகளையும் பதித்தது. வருமானமும் 40 மடங்கு அதிகரித்தது. 2016ம் ஆண்டு கணக்குப்படி டாடா குழுமத்தின் வருமானம் 103 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தது. ஜாகுவார் லேன்ட்ரோவர் நிறுவனத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்த ரத்தன் டாடாவின் முயற்சிகளே முக்கியக் காரணம். அதேபோல கோரஸ் நிறுவனத்தையும் டாடா ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்தி சர்வதேச அளவில் முக்கிய இடத்தைப் பிடித்தது.


பெரும் பணக்காரராக இருந்தபோதிலும் கூட அதை மிகப் பெரிய கொடையாளியாகவும் டாடா இருந்துள்ளார். அவரது நன்கொடைகளுக்கு கணக்கே கிடையாது. அந்த அளவுக்கு வாரி வழங்கினார். கல்வி உதவிகளுக்காக அவர் செய்தது மிகப் பெரிய கொடையாகும்.  ஹார்வர்ட் பிசினஸ் பள்ளிக்கு தனிப்பட்ட முறையில் 50 மில்லியன் டாலர் நிதியைக் கொடுத்துள்ளார் ரத்தன் டாடா.. அதேபோல கார்னல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக அவர் 28 மில்லியன் டாலர் நிதியைக் கொடுத்துள்ளார். டாடா குழுமத்தின் லாபத்தில் 65 சதவீதத்தை நன்கொடையாக தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ரத்தன் டாடா. கல்வி, சுகாதாரம், தொழிலாளர் நலன் என பல விஷயங்களுக்கு இந்த நன்கொடைகள், நிதி தரப்பட்டுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது டாடா குழுமத்திற்குச் சொந்தமான தாஜ் ஹோட்டலும் பாதிப்படைந்தது. பராமரிப்பு பணிக்காக ஹோட்டல் சில மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கூட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தை  தொடர்ந்து கொடுக்க உத்தரவிட்டவர் ரத்தன் டாடா.


Ratan Tata: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு.. காலை 10.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு!


இந்தியர்களுக்கு சிறந்த ரோல்மாடல்




தொழிலதிபர் ரத்தன் டாடா, ஒரு தொழிலமுறை பைலட்டும் கூட. கார்கள் மீதும் நிறைய காதல் கொண்டவர்.. அதை விட செல்லப் பிராணிகளிடம் மிகுந்த பிரியம் காட்டியவர். குறிப்பாக நாய்கள் என்றால் இவருக்கு உயிர். ரத்தன் டாடாவின் வாழ்க்கையில் ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல பிரமிக்க வைப்பவை.. தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, நல்ல வாழ்க்கை வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு சிறந்த ரோல் மாடல்.


இந்திய தொழில்துறைக்கு மட்டுமல்ல, மொத்த இந்தியாவுக்குமே ரத்தன் டாடாவின் மரணம் பேரிழப்பு.. சாதாரண வாட்ச் முதல் கார் வரை அத்தனை செய்துள்ளார் இந்த மனிதர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்