அபாயகரமாக மாறும் Deepfake Technology.. ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து அத்துமீறல்!

Su.tha Arivalagan
Nov 06, 2023,06:35 PM IST

மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து ஏஐ தொழில்நுட்பத்தின் Deepfake முறையைப் பயன்படுத்தி வெளியான வீடியோ பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக பரவி வருகிறது. இதில் பல நல்லது இருந்தாலும் கூட வழக்கம் போல ஒரு கூட்டம் இதை தவறாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல்வேறு நாடுகளும் அச்சம் தெரிவித்துள்ளன.


30 வருடத்துக்கு முந்தைய இளமையான ரஜினியை உருவாக்குவது, எம்ஜிஆருக்கு உருவம் கொடுப்பது இப்படி பல ஜாலியான நல்ல விஷயங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் இருந்தாலும் கூட பல போலியான வீடியோக்களை, படங்களை உருவாக்கவும் வாய்ப்பிருப்பதால் இது அபாயகரமான தொழில்நுட்பமாக மாறி வருகிறது.




இந்த நிலையில் ஒரு வைரல் வீடியோவை ராஷ்மிகா மந்தனாவை வைத்து விபரீதமாக மாற்றி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஒரு கும்பல். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜாரா படேல். இவர் கவர்ச்சிகரமான படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அப்படித்தான் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதாவது கவர்ச்சிகரமான உடையில் லிப்ட் ஒன்றுக்குள் நுழைவது போல அது இருக்கும்.


அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதே வீடியோவை வைத்து  ராஷ்மிகா மந்தனா முகத்தை அதில் திணித்து Deepfake Technology மூலம் போலியான வீடியோவை உருவாக்கி சிலர் வலம் வர வைத்துள்ளனர். இந்த வீடியோ மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பார்க்க தத்ரூபமாக ராஷ்மிகா மாதிரியே இந்த வீடியோ காணப்படுகிறது. இதுதான் ஏஐ டெக்னாலஜியின் அபாயம்.


இந்த வீடியோவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.